(குயில், குரல் 1, இசை 21, 21-10-1958)
அரிசியைச் சான்றோர் உயிர் மருந்து என்கின்றார்கள். உயிர் வாழ்க்கைக்கு அரிசி இன்றியமையாதது என்பதை அவர்கள் விளக்கினார்கள். அத்தகைய உயிர் மருந்து, இந்தக் கண்மூடி ஆட்சியிலும் தமிழர்க்கு வேண்டிய அளவு கிடைக்கிறது; விளைகின்றது! ஆனால் அது தமிழர்க்கு கிடைக்கும்படி ஆட்சியாளர் ஒப்புதல் தரவில்லை.
காப்பளிக்காதது மட்டுமா? பெரு முயற்சி செய்து வேறுநாட்டுக்குக் கொண்டு போகிறார்கள் ஆட்சியாளர்கள். கொண்டு போகிறார்கள் என்பது மட்டுமா? கொண்டு போவதை ஒத்துக் கொள்வதில் பெருமை கொள்ளுகின்றார்கள் மானங்கெட்டவர்கள். ஒத்துக் கொள்வது மட்டுமா? அயலார்க்கு அனுப்பி வருவதற்கு ஒரு பொய்க் காரணத்தையும் கூறுகின்றார்கள் கொடியவர்கள். வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழர்கள் அவ்வாறு பாலுக்குச்சர்க்கரை கேட்கவில்லை சோத்துக்கு உப்பு கேட்கிறார்கள்! இரங்கத்தக்க நிலை! அரிசி இல்லை-இது தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும் பாடும் பஞ்சைப்பாட்டு இந்த வகையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். ஒன்றுபட்ட தமிழர்கள் அனைவரும் துன்பம் துன்பம் என்கிறார்கள். அதுவே எமக்கு இன்பம் இன்பம் என்கிறார்கள் போலும் ஆளவந்தவர்கள். ஒன்றுபட்ட தமிழர்கள் வேர்த்து ஆடுகின்றார்கள்! ஆளவந்தார்கள் கூட்டம் கூத்தாடுகின்றது. ஒன்றுபட்ட தமிழர்கள் விழுந்தழுகின்றார்கள்.ஆளவந்தார்கள் கூட்டம எழுந்து சிரிக்கின்றது. அப்படியானால் இன்றைய ஆட்சிநிலை குறை கொள்ளிப் பிணத்தின் நிலை என்பதா?
|