(குயில் - குரல் 1, இசை 22, 28-10-1958)
காரைக்கால் அரிசி எங்கே? இங்கே ஏன் அரசிப் பஞ்சம்? இது நம் புதுவை அரசுக்குத் தெரியாதா? தெரிந்தும் இந்தநிலையை விட்டு வைப்பது ஏன்? அரிசியை அயல் அரசுக்குக் கடத்தி கடத்தி காய்ப்பேறிய கரையின் கைகளை அறவழியில் நிறுத்த இந்த அரசினர் அக்கரை கொள்ளாத காரணம் என்ன? தமிழர் வயிற்றில் அடித்து, அரிசியை அயலில் கடத்துவார்தாம், இந்த ஆட்சியைத் தாங்குகின்றார்களா? அவர்கள் ஆதரவு இல்லாவிட்டால் இந்த ஆட்சி பொத்தென்று கீழே விழுந்துவிடுமோ? நல்லதற்குப் பாடுபடுவதால் இந்த ஆட்சி வலிவு குறைந்துவிடும் என்றால் பார்ப்போமே! நல்லதற்குப் பாடுபடுவதால் சில சட்டமன்ற உறுப்பினர் முறுக்கிக் கொள்வார்கள் என்றால் முறுக்கிக் கொண்டு தொலையட்டுமே! அரிசியை அயலவர்க்குக் கொடுத்துவிட்டு இங்குப் பட்டினியைத் தழுவ வேண்டும் என்ற அத்தனை கட்டாயத்தைத் தமிழர் விட்டுவைப்பாரா? இரண்டொரு முதலாளிகள்! ஏறியவிலைக்கு அரிசியை, நெல்லை, அயலில் கடத்தலாமே என்று நினைப்பது இயல்பு! அதைவிட்டு வைப்பது அடுக்குமா? இதற்குத்தான் சட்டமன்றில் தஞ்சைச் சட்டத்தையும் தள்ளி அரிசி முதலாளிக்குச் சலுகை கொடுக்கப்பட்டதா? இந்த அரசினர் உள்ளத்தைத் தெரிந்துதான், காரைக்கால் அதிகாரிகளும் அரிசி கடத்தலுக்குத் துணை போகின்றார்களா? அரிசியில்லை அரிசியில்லை என்று மக்களின் வயிறு எரிந்து வருகையிலா இந்த அரசியல் விளையாட்டு?
|