(குயில், குரல்,1 இசை23, 4-11-1958)
புதுவை சட்டசபைக்குத் திருவாசகம் படித்தாய்விட்டது. அவ்வாறு அதை ஒழித்துக் கட்டிய அரசினர் செயல் சரியா? தப்பா? எனில் இந்த நிலையில் செய்யத் தக்கதை அரசினர் செய்தார்கள். எனவே நூற்றுக்கு நூறு சரி என்றே கூறுவோம். புதுவையின் சட்டசபைக் காங்கிரசுக் கட்சி ஒரு பொய்க்காலிக்குதிரை அரசினர் கொடுத்த மூங்கில்கால் கொண்டுதான் தப்புந்தவறுமாக ஆடிக்கொண்டிருந்தது. புதுவையின் சட்டசபைக் காங்கிரசுக் கட்சியின் எதிர்க்கட்சி ஒரு மீன்கொத்தி, ஏரிக்குத்தகைக்காரன் எத்தனை கல் எறிந்தாலும் தன் முயற்சியில் அது தளர்ந்ததே இல்லை. சட்டசபைக் காங்கிரசுக் குழந்தைகள் கட்டுக்குலையாமல் இருக்க வேண்டுமே என்று அரசினர் இட்டு வந்த இலஞ்சமல்ல. இது ஈகையின் பாற்படும். குழந்தைகளுக்கு ஆசை வந்தபோதெல்லாம் காசு தந்து கையமர்த்தினர். ஆயினும் கட்டுவலை பட்டென்று அறுந்தது. விட்டுப் பிரிந்த சில மீன்களைத் தட்டிக் கொண்டது மீன்கொத்தி! இவ்வளவு விரைவில் இந்த நெல்லிக்காய் மூட்டையின் வாய்ப்புறம் கிழியும் என்று அரசினர் எதிர்ப்பார்க்கவே இல்லை. நல்லவர்களும் இருப்பார்கள் என்று நம்பினார்கள் அரசினர்.பிடிக்காத வீட்டில் சட்டசபைப் பெரிய நாற்காலிகள் எல்லாம் போய்ச்சேர்ந்ததற்குக் காங்கிரசுப்புலிகள் தாம் காரணம் என்பது புரிந்துவிட்டப்போதிலும் இன்னும் ஓர் ஓட்டுப்பார்க்கலாம் என்று எண்ணினார்கள் அரசினர். அந்த எண்ணம் நகைப்புக்குரியது. எத்திப்பிழைக்க ஓடின மீன்கள். அவைகளைக் கொத்திப் பிழைத்தது தனி மீன் கொத்தி! காரணம் இருபக்கத்திலும் மூண்டெழுந்த தன்னலப் பசி வெறி.
|