பக்கம் எண் :

87

Untitled Document

16. புதுவை மக்கள் துடிப்பு


(குயில், குரல் 1, இசை 24, 11.11.1958)


     நம்  அச்சகத்தின்  குறட்டில் ஓர் அரிசிக்கடை இருக்கிறது. அரிசிக்
கடையின் அண்மையில்தான்   நாம் உட்கார்ந்து இரங்கத்தக்க ஆட்சியைக்
கண்டு வருந்துகின்றோம்.    நான்கு   நாட்களுக்கு  முன் ஒரு ரூபாய்க்கு
(புதுவைப்படி)   ஒன்றே  முக்கால்   படி   அரிசி கிடைத்தது. அப்போது
அழுதுகொண்டேதான் வாங்கிச் சென்றார்கள்.

     இன்று ஒரு ரூபாய்க்கு  ஒன்றரைப்படி அரிசி ஆகிவிட்டது. பிள்ளை
குட்டிகளைப்   பெற்ற   ஏழைத் தாய்மார்கள் அழாமல் வாங்கிக் கொண்டு
போகின்றார்கள் ஏன்? அழவும் அவர்கள் வலியிழந்து விட்டார்கள்.

     ‘‘காரைக்கால் விளைச்சல் புதுவைக்கே விற்கப்படவேண்டும்’’ -நம் ஐ கமிஷனரின் இந்த ஒரு சொல் புதுவை வட்டார மக்களின் வயிற்றில் பாலை
ஊற்றும்!   காலந்தாழ்த்த  வேண்டாம் என்று நம் ஐ கமிஷனரைக் கேட்டுக்
கொள்கின்றோம்.

     காரைக்கால்   நிலக்கிழார்க்கும்   இதில்  இரக்கம் இருக்கவேண்டும்.
புதுவையின்   பசிப்பிணியைப்  போக்குவதில் அவர்கட்கு அக்கரை இருக்க
வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

     நாம்   ஆர்லிக்ஸுக்கு    அழவில்லை.   ஓவல்டின்னுக்கு   ஆவல்
கொள்ளவில்லை.  பணக்காரர்  சிலருக்கு வேண்டும் அவை. அதோ இன்றும்
9.8.0 ரூபாய்க்கே  விற்றுக்   கொண்டிருக்கின்றார்கள். கொள்ளையடிக்கட்டும்.
நாம்   கவலைப்படவில்லை.   நாம்   கேட்பதெல்லாம்    புதுவை வட்டார
பெரும்பான்மை ஏழை மக்கட்கு இன்றியமையாது வேண்டப்படும் அரிசி.

     எல்லாப்    பண்டமும் விலை ஏறிவிட்டது. மக்கள் துடிக்கின்றார்கள்.
அந்தத் துடிப்பை   அவர்களால் அடக்க முடிகிறதா ஏன்? அரிசி நயத்தால்,
வடித்துக்   தண்ணீர்   ஊற்றி,   உப்பிட்டு உண்டு உயிர் வாழலாம் என்று
அவர்கள் எண்ணுகிறார்கள்.