(குயில், குரல் 1, இசை 26, 25.11.1958)
நல்ல இடத்தில் நல்ல வேளையில் வித்தப்பட்டிருக்கிறது தமிழ் வளர்ச்சி விதை. பார்ப்பனர் ஏடுகளை இடமாகக் கொள்ள அல்ல. அவைகளைப் பின்பற்றும் மற்ற ஏடுகளை இடமாகக் கொள்ளவில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை இடமாகக் கொள்ளவில்லை.
தமிழ் வளர்ச்சிக் குழுவானது அமைச்சர் சுப்பிரமணியனார் தலைமையில் அரசினர் சார்பில் இடம் பெற்றுள்ளது!
நல்ல வேளையில் விதை தெளிக்கப்பட்டிருக்கிறது என்கின்றோம். வேறென்ன?
தமிழ்ப் பெருநூற்களில் நச்சினார்க்கினியாரின் பொருந்தாக் கருத்துக்களும், திருக்குறள் முதலியவற்றில் பரிமேலழகரின் பொருந்தாக் கருத்துக்களாலும் பொய்யான புராணங்கள் இதிகாசங்கள் என்பன தமிழ்நாட்டில் உதிர்த்த கனற்பொறிகளாலும் கம்பராமாயணம் முதலிய நூல்கட்கு உரைசெய்ய வந்து தமிழை ஒழித்துக்கட்டஎண்ணிய வை.மு.கோ. போன்றோரின் துடுக்குச் செயல்களாலும் மனம் புழுங்கி வந்த தமிழர்களை அளவோடு தூக்கி அனலில் எறிவதுபோல், திராவிட மொழியாராய்ச்சி குழுவின் வாயிலாகத் தமிழையே குழிதோண்டி மறைக்கமுன்வரும் அண்ணாமலைப்பல்கலைக்கழகச் செல்வப் பிள்ளைகளான தெ.பொ.மீ. - சேது ஆகிய இரு பிள்ளைகளாலும் அன்னை படும்பாட்டை இன்னும் பொறுக்க மாட்டார் தமிழர் என்று எண்ணிய வேளை இது. நல்ல வேளைதானே! தமிழ்மொழி வளர்ச்சிக்கென ஏற்படுத்தப்பட்ட இந்தக் குழுவானது பரந்த மனப்பான்மையோடு உறுப்பினரைத் தேடுகின்றது. கல்வி தமிழ் பற்றிய எல்லா நிறுவனங்களினின்றும் உறுப்பினர்களைக் கேட்கின்றது. தனிப்பட்ட தமிழறிஞர்களையும் அது சேர்த்துக்கொள்ள அவாவுகின்றது.
|