ஏதோ தரித்திரராகிவிட்டோம்; நமது நிலையும் நினைப்பும் தாழ்ந்திருக்கின்றன. இனியாவது தரித்திரராகாமல் இருக்க, ஒரு வழி வகுக்க வேண்டும் என்பதே என் அவா. பழங்காலத் தமிழகத்தைப் பற்றி, அதன் சிறப்பைப் பற்றி, அதில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி, காதலைப் பற்றி, பண்பைப் பற்றி இன்று நாட்டின் பெரும் பகுதியினரான பாமர மக்களுக்குத் தெரியாது. பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஒரு சிலருக்குத்தான் தெரியும். தெரிந்த நம் நெஞ்சில் மீண்டும் தாழ்ந்த தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்றும், இன்று மக்கள் மனதில் படிந்திருக்கும் மூடநம்பிக்கைகளை, தமிழ்ப்பண்பாட்டிற்கு மாறான கருத்துக்களைக் குடியேற்ற வேண்டும் என்றும் நினைப்புகள் தோன்றியிருக்கின்றன. இந்த நினைப்புகள் பாமரமக்கள் மனதிலும்தோன்ற நாட்டில் எங்கும் அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். பண்டைய நம் பண்புகள் பற்றி ஏட்டிலே உள்ளவைகளை நாட்டிலே உள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். |
இப்பொழுது உங்களுக்கு மாத்திரமல்ல பரிட்சை நடக்கப்போகிறது, தமிழகத்திற்கும் தற்காலம் பரிட்சை நேரம். நீங்கள் படிக்கிறீர்கள், உங்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். நீங்கள் பரிட்சையில் தேறிடலாம். ஆனால் தமிழ்நாடு பரிட்சையில் தேறவேண்டுமே! பரிட்சைக்குப் போகும் தமிழ்நாட்டிற்கு யார் பாடம் சொல்லிக்கொடுப்பது? தமிழ் நாட்டிற்குப் போதனை செய்வதற்கு மாணவர்களைத் தவிரவேறு யார் இருக்கிறார்கள்? உங்களைக் கேட்கிறேன்; ஆசிரியர்களைக் கேட்கிறேன்; என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்; நீதியைக் கேட்கிறேன்; அறிவைக் கேட்கிறேன்; வெட்டவெளியில் நின்று ஆகாயத்தைப் பார்த்துக் கேட்கிறேன்; எதிரொலியாவது பதிலைத் தரட்டும். மாணவர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் தகுதியானவர்கள். |