பக்கம் எண் :

18பேரறிஞர் அண்ணா

இருப்பதற்கும்,     மாடி   வீட்டுக்குச்  சொந்தக்காரன் பணக்காரனாக
இருப்பதற்கும்  "விதிதான்"  காரணம்  என்ற  மூடநம்பிக்கை போகும்
வரையில்   அவன்   பல   மாடி   வீடுகளைப்  பிறருக்கும்  கட்டிக்
கொடுத்துவிட்டு  ‘தான்  ஏன்  அந்த  மாடி  வீடுகளில் ஒரு வீட்டின்
உப்பரிகையில்   உல்லாசமாக   உலவக்கூடாது'   என்று  நினைத்துப்
பார்க்காமல்  நினைத்துப்  பார்க்கவும்  நேரமில்லாமல்,  பகலெல்லாம்
உழைத்துவிட்டு இரவானதும், தன் குடிசைக்குள் குனிந்து  செல்லுவான்.
மனதிலே  இருந்த  மூடநம்பிக்கை  பகுத்தறிவுப்  பகலவனைக் கண்டு
மூடுபனிபோல  நீங்க  ஆரம்பித்த  மறுகணமே, தொழிலாளி நினைக்க
ஆரம்பித்துவிடுவான்;   "நான்   ஏன்   மாடிவீட்டில்  வாழக்கூடாது?
பிறப்பில்  ஒருவன்  ஏழையாகவும்  மற்றொருவன்  பணக்காரனாகவும்
ஏன்  பிறக்க  வேண்டும்?"  என்று தன் மனதைக் கேள்வி கேட்பான்.
அந்த நினைப்பின் வளர்ச்சியைத் தடைப்படுத்த யாராலும் முடியாது.
 

ஆகையால்     மக்கள் மனதிலே படிந்துள்ள  மூடநம்பிக்கைகளை
முதலில்   அகற்றியாகவேண்டும்.   இந்நாட்டிலோ  100க்கு  96  பேர்
படிக்காதவர்கள்,   படிக்காதவர்களாக   இருந்தாலும்    பரவாயில்லை.
பாழும் இதிகாசப் புராணக் கருத்துக்களைப் பலமாகக்  கடைப்பிடித்துக்
கொண்டிருப்பவர்கள்.  இது  நல்ல  நிலையா?  இருக்கலாமா?  இதை
ஒழிக்க  நாம்  என்ன  முயற்சி  எடுத்துக்கொண்டோம்?  அரசாங்கம்
அறியாமையையும்  மூடநம்பிக்கைகளையும்  போக்க என்ன செய்தது?
ஏதாவது   திட்டம்   வைத்திருக்கிறதா?   திட்டம்  வைத்திருப்பதாக
அறிகுறியே இல்லை.
 

எடுத்துக்காட்டாக     நான் இன்று பத்திரிக்கையில் படித்த செய்தி
ஒன்றை  உங்களுக்குக்  கூற  விரும்புகிறேன்.  இன்று நமது நிலையும்
நினைப்பும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இந்தச்  செய்தியைக்
கேட்கும்   உங்களுக்கு   அறியாமையையும்   மூடநம்பிக்கைகளையும்
போக்கத்  திட்டம்  இருக்கவேண்டிய  இந்திய சர்க்காரிடம் எத்தகைய
திட்டம்  இருக்கிறது  என்பது  தெரியும்.  மகாபாரதத்திலுள்ள  சாந்தி
பருவத்தை, நேப்பாள