கொண்டாலும் தமிழ்ப் பொதுப் பேரவையின் உறுப்பினர்களாகிய நீங்கள் அஞ்சமாட்டீர்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தமிழ்ப் பொதுப் பேரவைப் பேச்சு மேடையை அரசியல் மேடையாக்கி வகுப்பு வாதத்தை வாதத்துக்கழைத்து நாட்டுப் பிரிவினையைப் பற்றிப்பேசித் தொடக்க விழாவை நாட்டுப் பிரிவினை நாளாக மாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இல்லாதவன். கொஞ்ச நாளாக அரசியலிலேயே அலுப்புத் தட்டியவன் நான். அலுப்புக்குக் காரணமான அரசியலை உங்கள் அச்சத்துக்குரிய பொருளாக மாற்றமாட்டேன். சர்க்காரே சிந்தனைக்குத் தடை விதித்தாலும் நமது கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் அடிக்கடி தமது சொற்பொழிவிலே "அச்சம் தவிர்" என்ற அட்சரத்தை ஓதி வருகிறார். பல்கலைக்கழகம் உங்களுக்கு அளித்திருக்கும் இலச்சினையில் "With Courage and Faith" என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் "அச்சம் தவிர்" என்று போதனை புரியும் அவினாசியார் ஆட்சியின் கீழ், தைரியத்தை (Courage) தனது ஒரு முக்கிய பண்பாக உடைய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயமறியாத பருவத்திலுள்ள நீங்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. "பயப்படக் கூடாது" அதுதான் பல்கலைக் கழகத்தின் பண்பாக இருக்க வேண்டும். பயந்தால் பல்கலைக் கழகத்தின் பண்பே பழிப்புக் கிடமாகும்; அது பண்பு உயர்த்தப்படவேண்டும் என்பதற்கு அறிகுறி. ஆனால், அதனால், உங்களுடைய உள்ளத்திலுள்ள கருத்துக்கள் எனது எடுத்துக்காட்டுகளால் மாற வேண்டு மென்பதல்ல. என்னுடைய கருத்துக்களை வாங்கி அறிவென்னும் உரைகல்லில் உரைத்து, சிந்தனைத் துலாக் கோலால் நிறுத்து, சரியா தப்பா என்று பார்க்க வேண்டும். சரியானதை ஒத்துக் கொள்ள வேண்டும்; ஒத்துக் கொண்டதை ஓம்ப வேண்டும். இது பண்புள்ளவர்கள் செய்யவேண்டிய கடமை; பல்கலைக்கழகம் வளர்க்க வேண்டிய பொருள். இது எனது சொந்தச் சார்பில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிற நல்லுரை.
|