பக்கம் எண் :

நிலையும் நினைப்பும்3

"நிலையும் நினைப்பும்" என்ற தலைப்பை உங்கள் தொடக்க விழாச்
சொற்பொழிவுக்குத்   தந்தபொழுது,   நான்  சிந்தித்துப்  பார்த்தேன்.
இன்றைய  என் நிலையும் நினைப்பும் மக்களது நிலையும் நினைப்பும்,
மக்கள்  என்னைப்பற்றிக்  கொண்ட  நினைப்பும்,  நான்- மக்களைப்
பற்றிக்   கொண்ட  நினைப்பும்,  நினைப்பால்  மாறிய  இருவர்களது
நிலையும்   -  இப்படி  நான்  "நிலை"  -  "நினைப்பு"  என்ற  இரு
தொடர்களையும்         பொருத்திப்     பார்த்தேன்.     எனக்கு
விசித்திரமாகப்பட்டது.  எனவே   "நிலையும்   நினைப்பும்"   என்ற
தலைப்பிலேயே சற்றுப் பேசலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
 

ஒரு நாட்டின் நிலை அதன் நினைப்பை உருவாக்குகிறது. உன்னத
நிலையில்   உள்ள  நாட்டின்  நினைப்பு  உயர்ந்திருக்கும்;  தாழ்ந்த
நிலையிலுள்ள நாட்டின்  நினைப்பு  தாழ்ந்திருக்கும். அதாவது நிலை
உயர்ந்திருந்தால், நினைப்பும் உயர்ந்திருக்கும். நிலை தாழ்ந்திருந்தால்
நினைப்பும்   தாழ்ந்திருக்கும்.    நிலைக்கு    ஏற்றபடி   நினைப்பு
இருப்பதில்லை.  மூன்றாவது   அடுக்கு  மேல்  மாடியில்  உலவுகிற
தொழிலாளியின் நினைப்பு  அவன்  நிலை  உயர்ந்திருக்கிற  அளவு
உயர்ந்திருப்பதில்லை.  மூன்றடுக்கு மாடிவீட்டைக் கட்டிவிட்டு அவன்
தாழ்ந்த  குடிசைக்குள்  குனிந்து  நுழையும்பொழுது,  "அவன் பிறந்த
வேளை  மாளிகையில்  வாழுகிறான்;  நாம் வந்த வேளை குடிசையில்
வாழுகிறோம்"  என்றுதான் எண்ணிக்கொண்டு நுழைவான். மூன்றாவது
அடுக்கு   மாடியில்   நல்ல   பொம்மைகள்  அமைப்பான்;  அந்தப்
பொம்மைகளை     அழகுப்படுத்துவதில்     வர்ண     ஜாலத்தைக்
காண்பிப்பான்.   பொம்மைகள் கலைத் திறனைப் பேசுகிற அளவுக்குத்
தன் கைத்திறனை  எல்லாம் செலவழிப்பான். இவ்வளவும் செய்துவிட்டு
அவன்   பேசாமல்   குடிசைக்குள்        குனிந்து    செல்லுவான்.
தான்      ஏன்      மாடி     வீட்டில்     வாழக் கூடாது - ஒரு
நிமிடமேனும்  அதைப்பற்றி  நினைக்க  மாட்டான். காரணம் மாடிகள்
கட்டி,  மாடி  ஏறப்படிக்கட்டுகள்  அமைத்து,  படிக்கட்டுகள் வழியாக
மாடி   ஏறினால்   மனதைக்கவர  அழகான  பொம்மைகள்  வைத்து,
ஆபத்துக்கிடையே வெய்யிலால் நெற்றியில் வழியும்