ஆகஸ்ட் 15-க்குப் பிறகு இன்னும் சீர்திருத்தம் பேசப்படுகிறது, பாடப்படுகிறது. "ஜாதிபேதமில்லை," "எல்லோரும் சமம்," "எல்லோரும் இந்நாட்டு மன்னர்," "அடிமையென்றும் ஏழையென்றும் யாருமில்லை நாட்டினில்" மதுரமான கீதம், செவிக்கு இனிமையான விருந்து, யாரும் பாடி விடலாம் என்று எளிதில் கூறிவிடலாம், பாட ஆரம்பித்தால் தெரியும். சாரீரம் கெட்டிருப்பதும், மேளம் சத்தம் கேட்காததும், தாளம் ஒத்துழைக்க மறுப்பதும், கீதம் பாடுவதிலே உள்ள கஷ்டத்தைவிட, கீதத்திலே உள்ள கருத்துக்களைத் தேசத்திலுள்ள மக்களுக்குப் போதிப்பதிலே உள்ள கஷ்டம் அதிகம். பகுத்தறிவுப்பிரச்சாரம் செய்ய விரும்புகிறவர்கள் நாட்டுப்புறத்திற்குச் சென்று பார்க்க வேண்டும். இன்னும் சாதி இருக்கிறது, பேதம் போக்கப்படவில்லை; ஆண்டையும் அடிமையும் இருக்கிறார்கள்; வைதீகம் என்னும் நோய் இருக்கிறது; இன்னும் மாறவில்லை என்பதைக் காண்பார்கள். வைதீகம் என்னும் நோய்க்கு டாக்டர்கள் மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது. பின் யாரால் அந்த நோயைப் போக்க முடியும் வாலிபப்பருவத்திலுள்ள மாணவர்களால்தான் முடியும். பகுத்தறிவு என்னும் ஒரே மருந்தால் வைதீகம் என்னும் நோயைப் போக்கமுடியுமே தவிர, வேறு எந்த மருந்தாலும் போக்க முடியாது. பகுத்தறிவுப் பிரச்சாரம் கடினமானதுதான், ஆனால் வாலிபப் பருவத்திலுள்ள மாணவர்களைவிட வேறு யாரும் லாயக்கானவர்கள் (அந்தப் பணிக்கு) இல்லை. மாணவர்களே கிராமத்திலுள்ள மக்களிடம் அறிவு எடுத்துச் சொல்லுகிற தூதுவர்களாக அனுப்பப்பட வேண்டும். B.A., M.A. பட்டம் பெறும் முன்னோ, பின்னோ ஓர் ஆண்டு மாணவர்கள் சமூகத்திற்குச் சேவை செய்யவேண்டும் என்று சில மாகாணங்களில் சர்க்கார் கொண்டுவரும் திட்டத்தை நான் பாராட்டுகிறேன்! மாணவர்கள் உண்மையிலேயே சமூகச்சேவை செய்ய வேண்டும்; மாணவர்களே கிராமங்களுக்குச் செல்ல |