அவர்களை இடைவிடாத பிரசாரத்தால் திருத்த வேண்டும். அவர்களிடத்திலுள்ள வைதீகத்தை விரட்டி அடிக்கப் பகுத்தறிவை ஆயுதமாக உடைய மாணவப்படையினால்தான் முடியும். அந்தப் படையை இந்தப் பல்கலைக்கழகம்தான் கொடுக்க வேண்டும். கொடுக்கவேண்டிய பொறுப்பு பெரிது, கடைசியாக எல்லோராலும் கைவிடப்பட்ட கேசு (case) உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது, குணப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில், மூடநம்பிக்கையுள்ள மக்களைத் திருத்த டாக்டர்களால் முடியவில்லை; உத்தியோகஸ்தர்களால் முடியவில்லை; ஊராள்வோர்களால் முடியவில்லை; அமைச்சர்களால் முடியவில்லை; கவிஞர்களால் முடியவில்லை; ஒரு காலத்திலே ஆலமரத்தடியில் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தார்கள் என்று கூறப்படுகிற காலத்தில்கூட யாகத்தால் முடியவில்லை; வேதத்தால் முடியவில்லை; சித்தர்களால் முடியவில்லை; ரிஷி சிரேஷ்டர்களால் முடியவில்லை. ஒரு காலத்திலும் ஒருவராலும் முடியவில்லை. மனிதனை மனிதனாக்க; மனிதனிடமிருந்து மிருகத்தனத்தைப் பிரிக்க, மனிதனை தேவனாக்க, எண்ணத்திலுள்ள இருளைப் போக்க, மனவளத்தை உண்டாக்க; அவர்களால் சாதிக்க முடியாததை நீங்கள் சாதிக்க வேண்டும். பிரசாரம் செய்ய வேண்டும்; நீங்கள் கோபுர வாசலிலே உள்ள நோயாளிகளிடம் செல்ல வேண்டும்; கோபுர வாசலிலே உள்ளவர்களிடம் மாத்திரமல்ல. கடைவீதியில் உள்ளவர்களிடத்திலும் செல்ல வேண்டும்; கடைவீதி உள்ளவர்களிடத்தில் மாத்திரமல்ல, நடைபாதையில் உள்ளவர்களிடத்திலும் செல்லவேண்டும். நடைபாதையில் உள்ளவர்களிடத்தில் மாத்திரமல்ல, ஆலைத்தொழிலாளிகளிடத்திலும் செல்லவேண்டும். ஆலைத்தொழிலாளிகளிடத்தில் மாத்திரமல்ல, விம்மி விம்மி அழுகிற விதவைகளிடமும் செல்ல வேண்டும், வீபரீத எண்ணத்திற்காக அல்ல, அவர்களை விடுவிக்க அவர்கள் எல்லோரிடத்திலும் சமயம் வாய்த்த போதெல்லாம், அறிவுப்பிரசாரம் செய்யவேண்டும். |