நீங்கள் ரயிலில் செல்லும்பொழுது கவனித்திருக்கலாம். உங்களுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தாரிடம், ஏறிச் செல்லுகிற ரயிலைப்பற்றி, ரயில் கண்டுபிடித்தவனைப் பற்றி, கண்டுபிடித்த காலத்தைப் பற்றி, ரயில் எப்படி ஓடுகிறது என்பதைப் பற்றி, ஓடிக்கொண்டிருக்கிற ரயிலை ஒரு நொடியில் எப்படி எதிரே உள்ள கைப்பிடியால் நிறுத்தலாம் என்பதைப் பற்றிக் கூறுங்கள். ஜன்னல் வழியாக எதையோ கவனித்துக் கொண்டு காதில் விழாததுபோலவே இருப்பார். ஆனால் கொஞ்சநேரத்திற்கெல்லாம் ஜன்னல் வழியாகத் தெரியும் ஒரு குன்று, குன்றின்மேல் தெரியும் கோபுரம். கோபுரத்தின் மேல் தெரியும் விளக்கு, அவைகளைக் கவனித்துப் பார்ப்பார். உடனே பக்கத்திலுள்ளவரைப் பார்த்துக்கேட்பார் - தூங்கினாலும் தொடையைக்கிள்ளிக் கேட்பார் - அது என்ன கோயிலுங்க! என்று, |