இதற்கு முன்பெல்லாம், கடந்த 10, 15 ஆண்டுகளாக, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது கிடையாது. கவிகளை மக்கள் கனவிலுங்கூடக் கருதினாரில்லை. தமிழுந் தன்னந் தனியே தமிழரை விட்டுப் பிரிந்து உலவிற்று. உதாரணமாக, அப்பொழுதெல்லாம் தமிழ் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எவ்வளவு தொடர்பு இருந்ததென்றால், முருகனுக்கும் தெய்வயானைக்கும் எவ்வளவோ அவ்வளவு. தமிழ்ப் பண்டிதர்களுடைய நிலையே தனி. அவர்கள் சரிந்த தலைப்பாகையும், உலர்ந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும் வீட்டில் அரைடஜன் குழந்தைகள் என்ற எண்ணமும், குறைந்த ஊதியமும் அவர்களைப் பரிதாபகரமான நிலையிலே கொண்டுவந்து நிறுத்திற்று. அதிக ஆற்றலிருந்தும், ஆங்கிலம் கற்காத காரணத்தால் நிலை தாழ்ந்தது. தமிழனுக்குத் தாய் மொழியைப் கற்றுக் கொடுத்த காரணத்திற்காகச் சம்பளம் குறைந்தது. அவர்களை இகழுவது, தள்ளி வைப்பது ஆகியவற்றின் பிரதிபலிப்பு மாணவர்களிடையேயும் தென்பட்டது. தமிழ் வகுப்பு என்றால் இஷ்டப்பட்டால் போகிற வகுப்பு என்று நினைத்தார்கள். தமிழ் வகுப்பு நடந்து கொண்டேயிருக்கும். தெய்வயானையை விட்டு விட்டு வள்ளியைத் தேடிக் கொண்டு முருகன் போவதுபோல், மாணவர்கள் வாத்தியாரை விட்டு விட்டு வெளியே போய்விடுவார்கள். |