அகநானூற்றையும், புறநானூற்றையும் மக்கள் மறக்க நேர்ந்தது. கற்றறிந்தோர் ஏத்தும் கலித்தொகையைக் கற்றவரிடம் காண்பதே அரிதாகி விட்டது. பரிபாடலைப் பார்க்கவே முடியவில்லை. ஆகவே, சங்க இலக்கியங்கள் மங்கி, மக்களுடைய மனத்தைப் பெறாமல் போனதற்குக் காரணம் அந்தச் சங்க இலக்கியக் கர்த்தாக்களைக் காண முடியாதபடி நமது கண்முன் திரை போட்டு விட்டார்கள். ஒரு சிலரையே மீண்டும் மீண்டும் அறிமுகப் படுத்துவன் மூலம், பொது மக்களுடைய ஆதரவைப் பெற முடியும்; குறிப்பிட்ட திட்டம் நிறைவேறும்; மக்களுடைய மனத்தை மாசற்ற கவிகளின் மீது பாய விடாமல் மருண்ட பாதைக்கு இழுத்துச் சென்றால்தான் என்ன! எதிர்க் கட்சியினருக்கு மட்டமா அல்லவா என்று பார்த்துக் கொண்டால் போதும் என்றெண்ணிவிடும் நயவஞ்சக நாசக்காலர்கள் நாட்டிலே உலவி வருகிறார்கள். |
கம்பனுக்குப் பிறகு எவ்வளவு கவிவாணர்கள் தோன்றினாலும், கம்பனுக்கு முன் பலர் இருந்த போதிலும், அவர்கள் வெறும் கவிகளாயிருக்கலாம்; ஆனால் கவிச் சக்ரவர்த்தி கம்பன் தான் என்று சிலர் சொல்லுகிறார்கள். கவிதை எவ்வளவு புரட்சிகரமாயிருந்த போதிலும், கவிதை காலத்தைப் படம் பிடித்துக் காட்டும் கருவியாக இருந்த போதிலும், அவற்றை இயற்றியவர்களைக் கவிச்சக்கரவர்த்தி என்று சொல்லமாட்டார்கள். 'அவர்கள் போற்றுகின்ற கவியிடம் (நாமக்கல் கவியுடன்) உள்ள கட்சிக் கொள்கைகள் தெரியா. அந்தக் கவியுடன் போட்டியிடக் கூடிய புரட்சிக் கவியிடம் (பாரதிதாசன்) உள்ள, காலத்துக்கேற்ற கருத்துகள் கட்சிக் கொள்கைளாகத் தெரியும். உடனே, இந்தக் கவியைக் கட்சிக் கவி, கற்பனா சக்தியைக் குறிப்பிட்ட கொள்கைக்காகப் பாழ்படுத்திவிடுகிறவர், என்று பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தி விடுவார்கள். அறிவிழந்த மக்கள் அதை நம்பிக் கவிதைகளைக் கைவிடுவார்கள். |