ஒருவர் எழுதின புத்தகத்திற்கு மறுப்போ அல்லது அதில் ஏதாவது குறையோ காணாவிட்டால், சில புலவர்களுக்குத் தூக்கமே வராது. திருவிளையாடல் புராணத்திற்கு விளக்கவுரை என்று திரு.வி.கலியாணசுந்தரனாரால் ஒரு புத்தகம் பிரசுரிக்கப்படும். அந்தப் புத்தகம் அச்சில் இருக்கின்ற அதே நேரத்தில், அதே அச்சுக்கூடத்திலேயே திரு.வி.க.வுக்குச் சில கேள்விகள் என்ற ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகும். ஒருவர் போட்ட புத்தகத்திற்கு இன்னொருவர் மறுப்பு எழுதாவிட்டால் அவருக்கு நிம்மதி ஏற்படாது. காரணம் அவர்களிடம் மூலதனம் குறைவு. ஒருவர் எடுத்து ஆளவேண்டுமென்றிருந்த அணியை, இன்னொருவர் கையாண்டிருப்பார். ஆகவே, எழுதியதில் குற்றங்கள் கண்டுபிடித்து அவரது பிழைப்பையும் கெடுத்து விடவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் மீதும் குற்றமில்லை. அவர்களிடம் எண்ணற்ற கருத்துகள் ஊறுவதில்லை. கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக நானும் பார்க்கிறேன்; பாரதியார், சுந்தரம் பிள்ளையைத் தவிர மேல் நாடுகளில் உள்ளது போலக் கலையைக் காலத்தின் கண்ணாடியாக்குகிறார்களா? அல்லது கலையைக் கடை வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறார்களா? அவர்களது பாக்களிலே எழுச்சி இருக்கிறதா? அதனால் நாடு உயர்வடைய ஏதாவது மார்க்கமுண்டா? என்றால் இல்லை. காரணம், புலவர்களின் பிற்போக்கான நோக்கமே. |