சங்க இலக்கியங்களின் இன்பங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால், இன்று முழுவதுஞ் சொல்லிக் கொண்டிருக்கலாம். சங்க இலக்கிய நுட்பத்தை அனுபவிக்க வேண்டிய இடங்களை நமக்கு ஏற்ற எளிய முறையில் அளிப்பது என்றால் அந்தத் துறையில் பாரதிதாசன் நாட்டுக்கும் நமக்கும் செய்துள்ள தொண்டினை மறந்தாலும் மறக்கலாம்; ஆனால் மறைக்க முடியாது. பாரதிதாசன் தரும் இலக்கியச் சுவையை அனுபவிக்க இலக்கணம் கற்றிருக்கவேண்டியதில்லை. பாரதிதாசன் பாக்களைப் படித்தவுடன் அவை நமது இரத்தத்தோடு இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி, நரம்புகளிலே ஊறுகிறது; சுவைத்தால் ருசிக்கிறது. படிக்கிறோம்; பாரதிதாசன் ஆகிறோம். படிக்கிறோம்; நாமும் பாடலாமா என்று நினைக்கிறோம். படிக்கிறோம்; 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்கிறோம். ஆனால், சில புலவர்கள் அதிலே இலக்கண அமைப்பு இல்லை எனலாம். அஃது அவர்களது ஓய்வுநேர வேலையாக இருக்கட்டும். |