புரட்சிக்கவி என்றுதான் அழைக்கிறோமேயன்றிப் புரட்சியில் முதற்கவி என்றழைக்கவில்லை. அவர் இந்த லோகத்தைப் பற்றி இவ்வளவு புரட்சிகரமாகப் பாடுவதற்குக் காரணம் அவர் வாழும் புதுவை ஆகும். புதுவையானது பிரான்சு நாட்டைச் சேர்ந்தது. பிரான்சு சுதந்திரத்தின் பிறப்பிடம். நாம் எல்லாம் ராஜாதி ராஜாக்களைப் போற்றிய நேரத்தில், அங்கு அரசர்களைச் சிறையில் அடைத்த காலம். அரண்மனைகளை ஆசிரமங்களாக அநியாயக் கோட்டைகளாக ஆக்கிய நேரத்திலெல்லாம் அங்கு பாஸ்டிலி உடைக்கப்பட்ட நேரம். ஆண்டான் அடிமை என்ற வார்த்தைகள் இங்கு உலவிய நேரத்திலெல்லாம் அங்கு சுதந்திரம். விடுதலை, என்ற கோஷங்கள் வானைக் கிழித்த நேரம். அந்தப் பிரான்சின் சாயல் அந்த பிரான்சின் தென்றல் அவர் வசிக்கும் புதுவையில் வீசுவதால்தான் அவர் கொடுக்கும் தலைப்புகள் புரட்சிகரமானவையாகப் புத்துலகக் கருத்துக்களைத் கொண்டிலங்குவனவாக இருக்கின்றன. |