பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!53

அவரது     பாக்களும்  வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வைத்த
நேரத்தில்,  மஞ்சள்  பெட்டியில்  வைத்துப் பூசிக்கப்பட்டன. இதைப்
பார்த்தார்  நம்  கவிஞர். நாம் இவ்வளவு நாட்கள் புளுகிவிட்டோமே;
எவ்வளவு   மக்களை   மருளுக்கு  அழைத்துச்  சென்றிருக்கிறோம்;
அவர்களுக்கு  உண்மையை  உரைக்கவில்லையே;  நாம் அகப்பட்டுக்
கொண்டோமோ;  நெற்றிக்கண்  பரமசிவத்தைப் பாடிவிட்டு, பிறகு ஓர்
பகுத்தறிவுவாதி,  ‘  நீ பரமசிவத்தைப் பார்த்தாயா?‘ என்று கேட்டால்,
என்ன  சொல்வது  என்று  சிந்தித்தார். அந்தச் சிந்தனை அவருக்குச்
சொன்னது,  "உனக்குக்  கவிதை  பாடக்  கயிலாயம்  தானா தேவை?
கடவுள்  தானா  வேண்டும்?  சுனையைப்  பற்றிப் பாடு; பறவையைப்
பற்றிப்  பாடு:  தென்றலைப்   பற்றிப் பாடு; நீலவானைப் பற்றிப் பாடு;
கோலவிழியைப் பற்றிப் பாடு; முழுநிலவைப் பற்றிப் பாடு; கூர்வாளைப்
பற்றிப்  பாடு; வீரனின் தோளைப் பற்றிப் பாடு; வட்டத் தாமரையைப்
பற்றிப்   பாடு;   அவை   உன்  பேனா  முனையின்  கட்டளைக்குக்
காத்துக்கிடக்கின்றன"   என்று   இதை  ‘ஏடெடுத்தேன்  கவி  ஒன்று
வரைந்திட‘ என்னும் அவரது  கவிதையிலே பார்க்கலாம். அது அவரது
கவிதை மட்டுமல்ல; அவரது சுய சரித்திரமுமாகும்.
 

அவர் செய்தது
 

நம்பத்     தகாதவற்றை   நம்புவதா? நம்பும்படி நாட்டு மக்களை
நிர்ப்பந்திப்பதா?  இதைவிட  நயவஞ்சகச் செயல் வேறொன்றுமில்லை.
அந்த  லோகமே வேண்டாமென்று இந்த லோகத்துக்கு வந்தார். வந்து
கடவுள்  முதற்  கொண்டு  கர்ப்பத்  தடை வரைக்கும், காதலிலிருந்து
விதவை  மறுமணம்  வரைக்கும்,   சுண்ணாம்பு  இடிக்கிற பெண்ணின்
பாட்டிலிருந்து    ஆலைச்சங்கின்    நாதம்   வரைக்கும்,   அன்றாட
வாழ்க்கைக்கு     அவசியமானதை,       கண்டுகளிப்பதை,     நாம்
பாடவேண்டுமென்றிருந்ததைப் பாடினார். பாடுகிறார். நாம் பார்ப்போம்!
 

இந்தக்     கட்டழகியின்     கண்ணீருக்காவது ஒரு பாட்டுப் பாட
வேண்டும்  என்று  நினைப்போம்.   ஆனால் பாட முடியாது, அதைப்
பாரதிதாசன் பாடுவார். நமது வேலையை அவர் செய்து தருகிறார்.