பக்கம் எண் :

ஏ, தாழ்ந்த தமிழகமே!57

பற்றிக்    கூறினதுபோல, மக்களின் மனோவேகத்தை, அடக்க, மாயா
வாழ்வைப்    புகுத்தினார்கள்    சில  நயவஞ்சகர்கள்;   எத்தர்கள்
நல்லவர்களைப்  போல  நடித்தார்கள், ஏமாளிகள் இந்த லோகத்தில்
கஷ்டப்படாமல்,   அந்த   லோகத்தில்  சுகம்   கிடைக்கும்;  இந்த
லோகத்தில்  நடக்கிற  அநியாயங்களுக்கு,  அந்த  லோகத்தில்  நீதி
கிடைக்கும்  என்றெண்ணி,   எவ்வளவோ   கொடுமைகளை   எவர்
இழைத்தாலும் அது எம்பெருமான் இட்ட கட்டளை என்று சொல்லவும்
முடியாமல்,     விழுங்கவும்      முடியாமல்     அனுபவித்தார்கள்.
அனுபவிக்கிறார்கள்.    மாயா   வாழ்வு,   விதி,   அந்த   லோகம்
என்பவையெல்லாம் புரட்சி மனப்பான்மையைத் தீய்த்து விட்டன.
 

வேறு நாடாயிருந்தால்?
 

இல்லாவிட்டால்,     150   ஆண்டுகளாக இவ்வளவு பெரிய நாடு,
பரந்ததொரு  விஸ்தீரணத்தைக்  கொண்ட  நாடு,  பலப்பல  புராணப்
பெருமக்களைக்    கொண்ட   நாடு   அந்நியனுடைய   ஆட்சியிலே
இருந்ததாகக்            கேள்விப்பட்டிருக்கிறீர்களா?      அல்லது
பார்த்திருக்கிறீர்களா? மேல்நாடுகளில் 25 ஆண்டுகளுக்கு ஒரு தடவை
புரட்சி  என்று  படிப்போம்.  கலையிலே  புரட்சி;  மதத்திலே புரட்சி;
நடையுடை   பாவனையிலே   புரட்சி,   பொருளாதாரத்தில்   புரட்சி;
எல்லாவற்றிலும்  புரட்சி  என்று  படிப்போம். இங்கு ஏதாவது உண்டா
என்றால் இல்லை (இன்று இல்லாவிட்டால் நாளையாவது ஏற்படுமா?)
 

வங்கத்திலே    பஞ்சம் ஏற்பட்டது. பட்டினியால் பல லட்சம் பேர்
பிணமாயினர்.   அந்தப்  பிணத்தை  நாயும்,  நரியும் இழுத்தன என்ற
இந்தக் காட்சி, என்ற இந்த நிலை மேல்நாடுகளிலே, வேறு நாடுகளிலே,
மட்டும் ஏற்பட்டிருந்தால்  என்ன நடந்திருக்கும்; அப்பொழுதே புரட்சி
நடந்திருக்கும்.   ஆனால்   துர்ப்பாக்கியமான   இந்நாட்டிலே  அது
கிடையாது;      ஏன்      ஏற்படவில்லை?     ஆங்கிலேயனுடைய
ஆயுதங்களுக்கஞ்சியா?  இல்லை.  புரட்சி மனப்பான்மையையே நமது
கவிதைகளும், காவியங்களும் அடக்கிவிடுகின்றன; ஆதலால்தான்.