உள்ளதைப் போலத் தரித்திரம் தாண்டவமாடியதில்லை. தன மிகுதியால் தமிழர் பிறருக்குத் தானம் வழங்கினர். மொழி, கலை, நாகரிகம் பிற பிற நாடுகளில் இருந்ததைவிட சிறப்புற்றிருந்தன. ஒவ்வொருவரும் கட்டுமஸ்தான உடம்பைப் பெற்றிருந்தார்கள். அந்தச் செல்வம் நிறைந்த மகோன்னத காலத்தில் உள்ள தமிழ்நாட்டின் நினைப்புக்கும் - கலை, மொழி, நாகரிகம் பிற நாட்டுக்கு அடிமையாகி, செல்வம் சீரழிக்கப்பட்டு, மனிதர்கள் குகைக்குள் அடைபட்ட சிறுத்தையாகி, பேதா பேதத்தால் பிரிந்து ஒற்றுமையில்லாமல் வாழ வழியில்லாத நிலையில் இருக்கும் இக்கால நினைப்புக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. சங்க காலத்திலுள்ள தமிழ்நாட்டின் நினைப்புக்கு, இந்நாள் தமிழ்நாட்டின் நினைப்பு எவ்வளவோ தாழ்ந்திருக்கிறது. எனது வாதத்திற்குத் துணையாக அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பட்டினப்பாலை, தொல்காப்பியம் ஆகியவைகளைச் சாட்சிக்கழைக்கிறேன். |
இக்காலத்தில் உலவும் நாசத்தை விளைவிக்கும் நம்பிக்கைகளை அக்காலத்தில் காணமுடியாது. தமிழர் எண்ணம் பிறருக்கு அடிமையாகாதிருந்த காலத்தில் எப்படிக் காணமுடியும்? அகநானூறு, புறநானூறுகளில் எந்தத் தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்பொழுது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்றோ எங்கேயாவது பாடலுண்டா? அல்லது படை கிளம்பி எதிரிகளுடன் போரிடும்பொழுதாவது வருணாஸ்திரம், வாயுவாஸ்திரம், மோகனாஸ்திரம், அக்கினியாஸ்திரம் ஆகிய அஸ்திரங்களில் எந்த அஸ்திரமாவது எதிரியை வீழ்த்தியபோது உதவியதாக எங்காவது பாடல் இருப்பதாகச் சொல்ல முடியுமா? பின் எப்படி போர் நடந்திருக்கும்? தமிழ் மன்னர்கள் வெற்றி பெற்றிருப்பர்? போர் என்றதும் வீரர்கள் கூடியிருப்பர்; பட்டாளம் அணிவகுக்கப்பட்டிருக்கும்; போர் முரசு கொட்டி யிருப்பர்; வஞ்சிகள் கூடியிருப்பர்; பாணங்கள் தொடுத்திருப்பர்; தூதுவர் சென்றிருப்பர்; கொடி இறக்கப்பட்டிருக்கும்; அகழிகளை வெட்டியிருப்பார்கள்; |