புதுச்சேரியிலே வைதிகர்களைக் திட்டுகிறார்களென்றால், பயப்படாமல் போய், ஏன் என்று பார்க்க வேண்டும். காக்கை குருவி எங்கள் குலம் என்று பாரதி பாடிய இந்த நாட்டிலே, சூத்திரர்கள், மனிதர்கள் எங்கள் குலம் என்று சொல்வதற்கு இன்று அஞ்சுகிறார்கள் என்றால், நாங்கள் வீசுகிற குண்டு எந்தக் கோட்டை மீது வீழ்ந்தாலென்ன? அதிலிருந்து வெளிவரும் விஷவாயுக்கள் - நச்சு வாடைகள் - முடக்கு வாதங்கள் ஒழிய வேண்டும். பார்ப்பனத் தோழர்கள் மாத்திரம் நம்முடன் கைகோர்த்துக் தோளுடன் தோள் இணைந்து, நாம் "ஜாதியை ஒழிப்போம்" என்று எழுதியும், பேசியும் செயலிலே காட்டியும் வருவதுபோல் வரட்டும். வராவிட்டால் சும்மா இருக்கட்டும். எதிர்க்காமலாவது இருக்கட்டும். எதிர்க்காமல் இருக்க முடியவில்லையென்றால் ஏளனம் செய்யாமலாவது இருக்கட்டும்; ஏன் என்று கேட்காமல் எதையாவது செய்யட்டும் என்று கூறட்டும். பாருங்கள்! பத்து வருடத்தில் ஜாதி ஒழிகிறதா, இல்லையா என்று! கவி கண்ட கனவு நனவாகிறதா, இல்லையா என்று. |
எங்கே - எடுத்துக் கொள்ளுங்களேன், ஒரு பத்திரிகை "பகவத் கீதையிலே நாலு சாதி இருக்கவேண்டும்" என்று பரமாத்மா கூறியிருக்கிறார் என்று எழுதும். "அது யார் சொன்னது? பகவத் கீதையிலே சாதிக்காதாரமில்லை" என்று ஒரு பேப்பர் எழுதும், மற்றொரு பேப்பர், "நீங்கள் கீதையை வேறு விதமாக அர்த்தம் பண்ணிவிட்டீர்கள்!" என்று செந்தமிழ்ச் செல்வி தீட்டும். அறிவுகெட்ட தமிழகம் எதைத்தான் நம்பும்? கீதையை நம்புமா? தனிப்பட்டவர்கள் சொல்லும் தத்துவார்த்தத்தை நம்புமா? |