நாம்தான், அந்த மதோன்மத்தர்கள் மண்டையிலே அடிக்க வேண்டும்" என்கிறார். அந்தக்கால மக்கள் 'கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில், கடும் புலிவாழும் காடு நன்றே' என்று அரண்மனையைவிட ஆரண்யமே மேல் என்று ஆரண்யம் புகுந்தார்கள், அரசாட்சியைப் பற்றிக் கவலைப்படாமல். |
பாரதிதாசன் தென்றலைப் பற்றியும், தமிழைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும்தானே பாடினார்; காதலைப் பற்றிப் பாடியிருக்கிறாரா என்றால் வேண்டிய மட்டும் பாடியிருக்கிறார்; அவர் கவிதைப் பகுதிகளில் எந்தப் பகுதியைப் படிக்காவிட்டாலும் காதல் பகுதியைப் பற்றி யாரும் படிக்காமலிருக்கமாட்டார்கள் என்பதற்காக, நான் காதலைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. காதலையும் வீரத்தையும் பாடும் படியும், பாடி ஆடும்படியும், அதை இசையிலே காட்டும்படியும், அவரது காவியங்களும் கவிதைகளும் சொல்லுகின்றன. தமிழ் நாட்டிலே காதலைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் புலவர்கள் அதிகம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் காரணம், தமிழ் நாட்டின் இயற்கை எழில். இங்குச் சுற்றிப் பார்த்தால், இங்கிலாந்தில் காணப்படுவது போலச் சுண்ணாம்புக் குன்றுகள் தோன்றா; அழகிய குன்றுகளுக்குப் பக்கத்திலே சாலைகள்; சாலைகளுக்குப் பக்கத்திலே சோலைகள்; வற்றாத ஜீவநதிகளுக்குப் பக்கத்திலே அவை பாய்கின்ற நன்செய்கள்; நன்செய்களிலே நிற்கும் பஞ்சை உழவர்கள்; அந்த உழவர்கள் பாடும் பள்ளு; அந்தப் பள்ளு நெஞ்சை அள்ளும் விதம். இந்தக்கவின் பொருந்திய காட்சி தமிழனுக்குக் காதலை ஊட்டுகிறது. காட்டை நாடாக்கியிருக்கிறார்கள். ஒரு காலத்திலே, விந்திய மலைக்குத் |