ஒப்புக்     கொள்ளுகிறேன்,    வாதத்திற்காக.  இதற்கு (கலப்பதற்கு) முன்பு?   பல்கலைக்கழகத்திலே   நீங்கள்   படிக்கிறபாடம்  ஆரியர் என்றோர் இனம் அல்லது கூட்டம் பன்னெடும் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து  இந்தியா  நோக்கி  வந்தது. யாரும் மறுப்பதில்லை. வரும்பொழுது  அவர்கள்  ஆடு,  மாடு ஓட்டிக் கொண்டு வந்தார்கள்; மறுக்கவில்லை.  ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் சில நாட்களில் சிந்துநதி தீரத்தில்    ஆரியாவர்த்தத்தைப்   படைத்தார்கள்;   மறுக்கவில்லை. அப்பொழுது    தெற்கே    தமிழ்நாடு   இருந்தது;   மறுக்கவில்லை. தமிழ்நாட்டில்     இருந்தவர்கள்     தமிழர்கள்;     மறுக்கவில்லை. தமிழர்களுக்கென்று    ஒரு    தனிப்பண்பு   இருந்தது;   இதையும் மறுக்கவில்லை.     தமிழ்    நாட்டில்    குடியேறிய    ஆரியர்கள் சற்றேறக்குறைய  3,000  ஆண்டுகளுக்கு  முன்  வந்தனர்;  இதையும் மறுக்கவில்லை.  ஆகவே,  ஆரியர்கள்  தமிழ்நாட்டுக்கு  வந்தவர்கள்; வந்த  பொழுது தமிழர்கள் உன்னத நிலையில் இருந்தனர் - என்பதை எவரும் மறுப்பதில்லை. யாவரும் ஒப்புக் கொள்கின்றனர்.      | 
தமிழ்நாட்டில்     குடியேறிய ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்து என்ன   எண்ணியிருப்பார்கள்.   பச்சைப்  புற்றரைக்கே  பஞ்சமான நாட்டிலிருந்து     வந்தவர்களின்     மனதிலே,    தமிழகத்திலுள்ள மாந்தோப்புகளும்   மண்டபங்களும்,   சாலைகளும்   சோலைகளும், குன்றுகளும்   கோபுரங்களும்,  வாவிகளும்  வயல்களும்  எத்தகைய எண்ணங்களைத்   தந்திருக்கும்?  நிச்சயம்   தமிழர்களைப்  பார்த்து அவர்கள்         கேட்டிருப்பார்கள்:      ‘மெல்லிய      ஆடை அணிந்திருக்கிறீர்களே,  அது  ஏது?’ என்று. தமிழர்கள் ‘அது எங்கள் கைத்திறமை;     இந்திரன்     தந்த    வரப்பிரசாதமல்ல’   என்று கூறியிருப்பார்கள்.  ‘இமயம் வரை சென்று உங்களது இலச்சினையைப் பொறித்திருக்கிறீர்களே,   அது   எப்படி’  என்று  கேட்டிருப்பார்கள். அதற்குத்  தமிழர்கள்  ‘அது  கருடாழ்வார் கடாட்சத்தாலல்ல, எங்கள் தோள்  வலிமையினால்’ என்று கூறியிருப்பார்கள். இன்னும் ‘உங்களது இசை   இன்பமாயிருக்கிறதே,   அது   எப்படி’  என்று  ஆரியர்கள் தமிழர்களைப்   பார்த்துக்  கேட்டிருப்பார்கள்.  அதற்குத்  தமிழர்கள் ‘நாரதர் தந்தியில் மீட்டிடும் தேவகானமல்ல;  |