1942-லேயே அவர் இங்ஙனம் எழுதியிருந்தும், பர்.தெ.பொ.மீ.
1974-ல் வெளியிட்ட "தமிழிலக்கணத்தில், அயன்மொழி
அமைப்புகள்" (Foreign
Models in Tamil Grammar)
என்னும் ஆங்கிலப் பொத்தகத்தில், தொல்காப்பியம்,
கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுந்த பாணினீயத்தைப்
பின்பற்றிய தென்றும், கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்குப்
பின் தோன்றிய தென்றும், துணிந்து தமிழைக்
காட்டிக் கொடுத்திருக்கின்றார்.
அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்
பேராசிரியராகப் பணியாற்றியதும், திருவையாற்று
அரசர் கல்லூரியில் பர். சுப்பிரமணிய சாத்திரியார்
முதல்வராகவும் பேரா. புருடோத்தம நாயுடு தமிழ்ப்
பேராசிரியராகவும் இருந்த காலத்தில், சென்னைப்
பல் கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் அராவ
அண்ணல் (ராவ் சாஹிப்) எசு (S) வையாபுரிப்
பிள்ளையின் கீழ்த் துணை விரிவுரையாளராகப்
பணியாற்றிய நான்மொழிப் புலவர் வேங்கடராசலு
ரெட்டியார், தம் பதவிச் செருக்காலும் தம் மேலவர்
துணையாலும், தமிழ் வடமொழி வழியது என்பதைக்
குறிப்பாகவும் மறைமுகமாகவும் காட்டுமாறு,
குற்றிய லுகரம் மெய்யீறே யென்று ப.க. கழக
வெளியீடாக வெளியிட்டதை மறுத்து,
குற்றியலுகரம் உயிரீறேயென்று நாட்டுதற்
பொருட்டு, மேற்குறித்த கல்லூரித் தமிழ்ப்
புலவர் வகுப்பு மாணவர் என்னை அழைத்திருந்தபோது,
என் சொற்பொழிவிற்குத் தலைமை தாங்கத் தக்கவர்
அவரே (நாவலர் பாரதியாரே) யென்று அவரை அதற்கு
அமர்த்தியதும், அவர் இலக்கியப் புலமைக்கும்
இலக்கணப் புலமைக்கும் தலைசிறந்த சான்றாம்.
இத்தகைய புலமையும் பற்றும் இருந்ததனால், தமிழுக்கு
எவரா லும் எவ்வகையிலும் எத்துணையும் ஊறு நேர்வதை
இம்மியும் பொறாத வராய், கடுந்தொலைவும் நோக்குங்
கூரிய கழுகுக்கண் கொண்டு எத் துன்பத்தையும்
எதிரதாக் காக்கும் விழிப்புடையவராய், இந்தி
இந்தியப் பொது மொழி யாவதை முந்தியே தடுக்குமாறு,
அதுபற்றிப் பேசி முடிபு கொள்ளும் வாரதாக் கூட்டத்தில்
அதை வன்மையாய் எதிர்க்க வேண்டுமென்று பண்டகர்
(Dr.)
சுப்பராயனுக்கு எழுதியும், இந்தி அரச
கோபாலாச்சாரியாரால் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டபின்,
அல்லும் பகலும் அலைப்புண்டு, நாடு முழுதும் நகர்தொறும்,
தொடர்ந்து நிகழ்ந்த மாலைக் கூட்டங்களிலும்
மாநாடுகளிலும் அரிமாபோல் உரறி இந்தியெதிர்த்தும்,
அரசகோபாலாச்சாரியார்க்கு ஆங்கிலத்தில்
திறந்த திருமுகம் விடுத்தும், இயன்றவரை முயன்று
எதிர்கால முழுவெற்றிக்கு அரணான அடி கோலினார்.
இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தில் நாடு
முழுதுங் கொந்தளித்தது; உண்மைத் தமிழர்
அனைவரும் குல மத கட்சி வேறுபாடின்றி ஓரினமாய்
ஒன்றினர். மறைமலையடிகள் எழுதிய "இந்தி
பொதுமொழியா?" என்னும் அரிய ஆராய்ச்சி எதிர்நூலும்
வயிரவாளாக உதவியது. |