மெல்லியன்
மேனியுள்ள பெண்டிர் பெரிதும் பெருமையும் பாராட்டும்
பெறத் தக்கவரேயன்றி, இழித்துக் கூறப்படத்தக்கவ
ரல்லர். அங்ஙனமே தமிழின் மெல்லோசை அதன்
தனிச் சிறப்பைக் காட்டுவதே. தொல் காப்பியம்,
திருக்குறள், திருக்கோவை முதலிய நூல்களை ஓதிக்
காண்க.
ஒரு மொழிச் சிறப்பிற்கு இன்றியமையாது வேண்டுவது
எல்லாக் கருத்துகளையும் தெரிவிக்கக்கூடிய
சொல் வளமேயன்றி ஒலி வளமன்று.
சில மரங்கள் கரந்து பூக்கும். சில மரங்கள்
வெளிப் படையாய்ப் பூக்கும். மரத்தின் பயன்
கனியே யன்றிப் பூவன்று. பலா மரத்திற்கு
வெளிப்படைப் பூவில்லையென்று, அதற்கு ஒருவரும்
பூ வொட்டக் கருதார். முக்கனிகளுள் ஒன்றானதும்
எல்லாவற்றிலும் பெரியதுமான அதன் நற்கனியே
தேவையானது. அதுபோன்று, திரவிடத் திற்குத் தாயும்
ஆரியத்திற்கு மூலமுமான தமிழின் சொல்வளமே தேவையானதும்
போதுமானதுமாகும்.
ஆங்கிலம் சொல்வள மின்மையாற் பிறமொழிச்
சொற்களை ஏராளமாகக் கடன் கொண்டது. அங்ஙனமே
பிறமொழிகளும். ஓர் ஏழை வணிகன் கடன்கொண்டு
பயன்பெறலாம். ஆயின், பிர்லா போன்ற
மாபெருஞ் செல்வர்ர் கடன் கொள்ள வேண்டியதில்லை.
மேலை மொழிகளிலுள்ள அறிவியற் கம்மியக்
குறியீடுகளை யெல்லாம் மொழிபெயர்க்கப்
போதிய கருவிச் சொற்கள் தமிழில் உள்ளன.
யான் எழுதியுள்ள "மண்ணில்
விண்"
என்னும் நூலின் இறுதியிற் காட்டப்பட்ட
மொழிபெயர்ப்பு நெறிமுறைகளைக் கையாளின்,
எல்லாக் கலைச்சொற்களையும் இன்னும் பத்தாண்டிற்குள்
தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்.
மேலைமொழிக் கலைச்சொற்களை அப்படியே கையாண்டு,
தனித் தமிழை வளர்க்க வேண்டுமென்பது, ஒரு சிலரொடு
மட்டும் பழகிக் கொண்டு ஒரு கன்னி தன் கற்பைக்
காத்துக் கொள்ளலாம் என்பது போன்றதே.
மொழிகள் பெருமரங்கள் போன்று மெல்ல வளரிகள். செடி கொடிகள் போன்ற
விரைவளரிகளல்ல.
ஆங்கிலம் 5ஆம் நூற்றாண்டிலிருந்து வளர்ந்து
வருகின்றது. நீராவிவலியும் மின்வலியும் கண்டபின்னும்,
இற்றை வளர்ச்சியுற அதற்கு முந்நூற்றாண்டாகிவிட்டது.
ஆகவே, தமிழ்க் கலைச்சொல் வளர்ச்சிக்கு
இன்னும் பத்தாண்டு வேண்டுமென்பது மிகையாகாது.
வகைவகையாய்ப் பல்வேறு இன்கனிகள் பயக்கும்
ஒரு மாந்தோப்பின் வளர்ச்சிக்குப் பல்லாண்டு
செல்லும். அதுவரை பொறுமை இன்றியமையாதது. பிற
மரங்களின் கிளைகளை வெட்டிக்கட்டி ஒரே நாளில்
ஒரு புதுமரம் உண்டாக்க முடியாது. அது போன்றே
மொழி வளர்ச்சியும். |