பக்கம் எண் :

10பாவாணர் உரைகள்

நல்லற நெறிக் கண் நிலைபெற்ற துணையாம், என்று பொருள் கூறுவதே பொருத்தமாம்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்."
(குறள். 1033)

என்னும் குறளும் ஈண்டு நினைக்கத் தகும்.

பார்ப்பான் நூல்களை அல்லது கோயில் வினைகளைப் பார்ப்ப வன். ஆகவே, ஆசிரியனும் பூசாரியுமான இல்லறத்தார் பார்ப்பார் என்பதாயிற்று. அந்தணன், பார்ப்பான் என்னும் இரண்டும் தூய தமிழ்ச் சொற்கள். இவை, பிராமணர் வருமுன், துறவியரும் இல்வாழ்வினருமான தூய தமிழரையே குறித்தன; பின்னர்ப் பிராமணர்க்கே வரையறுக்கப் பட்டுவிட்டன. இன்றும், உவச்சர், நம்பி, பண்டாரம், புலவர், போற்றி என ஆங்காங்கிருக்கும் பூசாரியரும், ஆசிரியருமான தமிழரெல்லாம் பார்ப்பாரே. பட்டினத்தடிகளும் தாயுமானவரும் போலத் துறவுபூண்ட தமிழரெல்லாம் அந்தணரே. பார்ப்பான் அல்லது பார்ப்பனன் என்னும் சொல் பிராமணன் என்பதன் திரிபென்றும், அந்தணன் என்பதற்கு ஒத்த பொருட்சொல்லான ஐயன் என்பது ஆரியன் என்பதன் திரிபென் றும் கூறுவதெல்லாம் தமிழரின் பேதைமையை அடிப்படையாகக் கொண்ட ஆரியக் குறும்பேயன்றி வேறன்று.

(1956-ஆம் ஆண்டு, மே, 2ஆம் நாள் தென்காசித் திருவள்ளுவர்
கழக ஆண்டு விழாவில் ஆற்றிய
தலைமைப் பேருரைச் சுருக்கம்.)
- தென்மொழி