பக்கம் எண் :

22பாவாணர் உரைகள்

தாழ்ந்தவன்; உனக்குத் தமிழ்ப்படிப்பு வராது; நீ கைத்தொழில் செய்ய வேண்டும்" என்று. திரு. காமராசர் வராவிட்டால் என்னவாயிருக்கும் இந்த நாடு?

"நான் தாழ்ந்தவன், நான் தாழ்ந்தவன்" என்று இப்படி நினைக்கவே வேண்டா. "நான் உயர்ந்தவன், நானும் ஒரு மகன்தான்; நானும் பிறரைப்போல துப்புரவாக இருக்க முடியும்; எனக்கும் இறைவன் அறிவைக் கொடுத்திருக்கிறான்" என்ற எண்ணம் வேண்டும். உருசி யாவிலே போய்ப்பாருங்கள், எவ்வளவு தாழ்ந்து கிடந்தவர்கள், காட்டு விலங்காண்டியாக இருந்தவர்கள், ஏழைக் குடியானவர்கள், கடைசியில் அமெரிக்கர்களைவிடச் சிறந்து உயர்ந்திருக்கிறார்கள். ஆகையினாலே இன்ன குலம் என்றில்லை; இன்ன குடும்பம் என்றில்லை; மதி நுட்ப முள்ள யாரும் கற்கலாம். இதெல்லாம் இடைக் காலத்திலே வேண்டு மென்றே கற்பிக்கப்பட்டவை.

பலகணி, சாளரம், காலதர் என்ற மூன்று சொற்கள் இருந்தது அந்தக் காலத்திலே. இப்போது சன்னல் என்ற போர்த்துக்கீசியச் சொல் வழங்குகிறது. அதனால் நாம் இந்தச் சன்னலைப் போக்கிவிட வேண்டும். "சன்னல்" நமதன்று. இந்த ஒன்றுக்கு இடங்கொடுத்தால் இன்னொன்றுக்கும் இடங் கொடுக்க வேண்டியதுதான். அயற்சொல் என்றால் அயற்சொல்தான். எந்தச் சொல் யார் வழங்கினாலும் சரி. சேத்திரமும் தொலைய வேண்டும்; ஆலயமும் தொலைய வேண்டும். எல்லாம் தொலைய வேண்டியதுதான். சேத்திரம் என்றால் சேத்திரக் கணிதம் வந்து விடுமே. ஆகையினாலே, அயற்சொற்களெல்லாம் எதற்கு? தென் சொற்கள், தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது. தமிழ்ப் பற்றில்லாதவன் என்ன வேண்டுமானாலும் சொல்வான். ஒருவனுக்குத் தாயின் மேலே பற்றிருக்கிறது, அவன் என்ன செய்வான்! தாய் நோய்வாய்ப்பட்டிருந்தால், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து "நான் உங்களை நலப்படுத்தத்தான் போகிறேன்" என்று சொல்லிக்கொண்டுதானிருப்பான். பற்றில்லாதவன் "சவத்தைத் தூக்கியெறியுங்கள்; ஏன் இவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்" என்பான். அதுபோலப் பலர் சொல்லிக்கொண்டே யிருக்கிறார்கள். ஆகையினாலே சொற்களை நாம் தமிழ்ப்படுத்த வேண்டும். இப்போது தமிழ்ப்படுத்து வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. தமிழிலே சொற்கள் நிறைய இருக்கின்றன. வடமொழியிலே சில சொற்கள் இருக்கின்றன. மலை யாளத்திலிருக்கிறவை எல்லாம் தமிழ்ச் சொற்கள்தாம். சமற்கிருத மல்லாத மலையாளச் சொற்களெல்லாம் பழைய சேர நாட்டுத் தமிழ்ச் சொற்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஆகையினால் அங்கு இருக்கின்றன தமிழ்ச் சொற்கள். இன்னும் அதற்குமேலே வட நாட்டிலும் சில சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைக்கும் நீர் என்ற சொல் வங்காளத்தில் வழங்கிக் கொண்டிருக்கின்றது.