பக்கம் எண் :

பாவாணர் சொற்பொழிவு45

ஆப்பிரிக்காவில் குக்குலத் தலைவர்கள் தம்பெயரால் ஒரு மொழி யையே ஏற்படுத்தி விடுகின்றார்கள். 50 சொற்களே இருந்தாலும் அவை முழுதும் இடுகுறிகளாக இருந்தாலும் அவை ஒரு மொழியாகின்றன.

கழகத்தின் நடைமுறைகள்

இக் கழகத்தின் தலைவர்கள் தொண்டு கருதியே தலைமை ஏற்க வேண்டும். அதிகாரிகள் தலைவணங்க வேண்டுமென்பதற்காக வன்று; பெயருக்காகவுமன்று.

திரு. சாத்தையாவும் இன்னும் இருவரும் நன்றாகச் செயற்பட் டுள்ளமைக்காகப் பாராட்டிற்குரியவர்கள்.

முற்றும் தனித்தமிழிலேயே பேசுவது எல்லோராலும் முடியாது, இயன்றவரை பேசவேண்டும். தனித்தமிழ் இதழான தென்மொழியிலேயே ஓரிரு வடசொற்கள் வெளிவந்தன. புவி, பரிமாணம், வதை போன்ற வையே அச்சொற்கள்.

வதை - "வதி" என்பதிலிருந்து வந்தது; வடசொல். எனவே தனித் தமிழிலேயே முற்றும் பேசவேண்டும் என்று வற்புறுத்த வேண்டா. இயன்ற வரை பேசினால் போதும்.

உறுப்பினர் சேர்ப்புப் படிவம் பற்றி:

கிளைக்கழகப் பெயர் - இருக்கலாம்

கிளையில்லாதவிடத்தில் தனிப்பட்டவரும் சேரலாம்.

வேறு கிளையிலும் சேரலாம்.

மணந்தவரா, நோக்கம், அலுவல், பேச்சாளரா போன்ற பகுதிகள் தேவையில்லை. ஊமைகூடச் செயலாற்றலாம். உலகத் தமிழ்க் கழகம் என்பதை ஆங்கிலத்தில் மாற்றும்போது கழகம் என்னும் சொல்லை "Organisation" என்று மொழிபெயர்க்கக் கூடாது. ஏனெனில் "Organisation" என்பது பொதுச்சொல்.

Society - Congress - Association ஆகிய மூன்று சொற்களுக்கும் Organisation என்பது பொதுச்சொல். எனவே கழகம் என்பதற்கு "Congress" என்பதே சிறந்த மொழிபெயர்ப்பாகும். அதற்குப் பொருள் பெருங்கூட்டம் என்றாகும்.

இனி, எழுத்து வன்மை உண்டா என்னும் கேள்வியும் தேவை யன்று. அரசியல் கட்சியில் உள்ளவரா என்றும் கேள்வி அறவே இருத்தல் கூடாது. பேராயக் கட்சியினருக்கு இங்கு இடமேயில்லை. தி.மு.க. வானாலும் தமிழ் முன், கட்சி பின்னாகக் கருதுவார்க்கே இடமுண்டு. இரண்டையும் சமமாகக் கருதினாலும் சேரமுடியாது.