பக்கம் எண் :

46பாவாணர் உரைகள்

இக்கழகத்தில் சேருவார்க்கு மதம்கூடத் தடையாக இருக்கக் கூடாது. மறைமலையடிகள் முழு அளவில் மதத்தில் ஈடுபடவில்லை. தமிழ்ப்பணி என்று வந்தால் மதச்சார்பு கருதாமல் என்னையும் உடன் சேர்த்துக் கொள்வார்.

கட்சியில் சேர்ந்தவர்கள், தமிழுக்கு மாறானவர்களைக் கட்சியுள் எதிர்க்க முடியாது.

மூன்று கையொப்பங்கள் தேவையில்லை; ஒரே கையொப்பம் போதுமானது. எப்போதும் தூயதமிழிலேயே பேசுவேன், எழுதுவேன் என்பதை "இயன்றவரை" என்பதையும் சேர்த்து அமைத்துக் கொள்க. "தனித்தமிழ்க் கொள்கையைப் பரப்ப இயன்றதைச் செய்வேன்" என்பதைப் புதிதாய்ச் சேர்த்துக் கொள்க.

நமக்குள் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது. திருமால் சிவநெறிகளை ஒரே "தென்மதம்" என்று சொல்லவேண்டும். நாவின் சுவை வேறுபட்டிருப்பது போல் மனத்தின் சுவையும் வேறுபட்டது; பலகாரம் உண்பதுபோல.

பெரியார் ஆராய்ச்சியில்லாததால் மதங்களை முற்றும் மறுத்துப் பேசுகின்றார். மதம் என்பது எய்ப்பில் வைப்புழி போல, அதாவது பிற்காலத்திற்குச் சேர்த்து வைப்பது போன்றது.

இதனால் உ.த.க.வினர் மதத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டு மென்றில்லை. நம்பிக்கை இல்லாதவரும் இதில் உறுப்பினராயிருக்கலாம். தமிழ்த் தெய்வங்கள் வேதத்தில் இல்லை.

இனி, நான் ஒரு போராட்டம் நடத்துவேன். உண்ணா நோன்பும், சிறைபுகுதலும் அப்போராட்டத்தில் இருக்கமாட்டா. அது எழுத்து, சொல் ஆகியவற்றால் நிகழும் போராட்டம்.

நான் மாணவனாயிருந்த நாட்களில் சேக்சுபியரின் 37 நாடகங் களைப் படித்திருக்கிறேன். அவ்வாறே தொடர்ந்திருந்தால் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் மாணவனாகச் சேரும் வாய்ப்பிருந்தது. ஆனால் ஒருநாள், இனிமேல் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் கூடாதென்றும், ஆங்கிலப் பேச்சைக் கேட்கவும் கூடாதென்றும் உறுதி செய்து என் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டேன்.

ஆங்கிலத்திற்கு உருசியம் இணையாக வந்து கொண்டிருக்கிறது. அவ் விரு மொழிகளும் செல்வாக்குப் பெறுவதற்குக் கரணியம் அவை வழங்கும் நாடுகள் புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் நாடுகளாக இருப்பதே!

பல்கலைக் கழகங்களுக்கிடையே இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலம் நீங்கினால் இந்தி புகுந்து விடும். பின்னர்த் தொடர்பிராது. ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து பிறிதொன்றிற்கு மாறுவதும் இயலாது.