பக்கம் எண் :

49

6

தமிழின் தொன்மை

தமிழின் தொன்மை என்பது எனக்குத் தரப்பட்ட பொருள். அதற்குத் தொன்மை எவ்வளவு காலமோ அவ்வளவு காலம் வேண்டும் அதைப் பற்றிப் பேச. தமிழின் தொன்மை என்று சொல்வதைவிட முன்மை என்று சொல்வது எனக்குச் சற்று உவப்பாகவும் தெரிகிறது.

இந்த மாநாட்டு மலரிலே முன்மை என்ற சொல்லைத்தான் நான் ஆண்டிருக்கிறேன். ஏனென்றால், கிறித்துவுக்கு முற்பட்ட நிலைமைகள் எல்லாம் - செய்திகள் எல்லாம் பொதுவாகத் தொன்மையானதெனத் தான் சொல்லப்படுகின்றன. தமிழோ மிகத் தொன்மையானது. உலகத்தி லுள்ள 3000 மொழிகளுக்குள்ளே முதன்மையானது. முந்தியதென்று சொல்லப்படக் கூடியது. ஆகையினாலே அதை முன்மை என்று சொல்வது மிகப் பொருத்தம்.

இந்தத் தொன்மையை நாம் ஏன் சொல்ல வேண்டும்? அப்போது தான் அந்தச் சிறந்த தன்மைகள் எல்லாம் நமக்கு வெளிப்படும்.

கால்டுவெல்தான் முதன் முதலாகத் தமிழினுடைய தொன்மை களை எல்லாம் ஆய்ந்து திராவிட மொழிகளையும் ஆய்ந்து அரிய ஒப்பியல் இலக்கணம் எழுதிய பெருமகனார் ஆவார்.

எழுதப்பட்ட முதற் சான்று என்னவென்றால் விவிலிய மறையிலே மயிலைக் குறிப்பிடுகின்ற துகி அல்லது துயில் என்ற சொல் இருப்பதாகக் கூறுகிறார்.

தோகை என்ற ஒரு பெயர் மயிலுக்குத் தமிழில் இருக்கிறது. பீலியை உடையதினாலே உவமையாகு பெயராக வந்தது. அந்தச் சொல் தான் அதில் ஆளப்பட்டிருக்கிறது. இது எந்தக் காலம் என்றால் சாலமோன் காலம். சாலமோன் காலத்திலே இங்கிருந்து கப்பலிலே ஏற்றப்பட்ட பொருள்களுள் ஒன்று அந்தத் தோகை என்பது. அது கி.மு. 1000 என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முந்திய சான்றாக ஆரிய வேதத்தை எடுத்துக் கொள்ளலாம். அது கி.மு. 1500 என்று சொல்லப்படுகிறது. வேதத்திலேயே பல தமிழ்ச் சொற்கள் இருக் கின்றன. வேதத்திற்கும் சமற்கிருதத்திற்கும் சிறிது வேறுபாடுண்டு.