பக்கம் எண் :

6பாவாணர் உரைகள்

"இயல்புடைய மூவர்"

கழகக் காலப் பண்டைத் தமிழிலக்கண விலக்கியங்கள், பெரும் பாலும், தூய தமிழ்நெறிபற்றிய வாதலால், அவற்றிற்குத் தமிழ்மரபு தழுவிப் பொருளுரைக்கவேண்டுவதல்லது, ஆரியக் கொள்கையடிப் படையில் விளக்கங் கூறுவது (வெளிப்படையான ஆரியச் செய்தியல்லா விடத்து), ஒரு சிறிதும் பொருந்தாது. அதிலும், ஆரியக்கோட்பாட்டை மறுத்துத் தமிழ வறத்தை நாட்டும் திருக்குறளைப்பற்றியோ, சொல்லவே வேண்டுவதில்லை.

திருக்குறட்கு உரைவரைந்த பண்டையாசிரியர் பதின்மருள், பொதுவாக நோக்கின், பரிமேலழகர் சிறந்தவரே. ஆயின், உயிர்நாடியான தமிழ்க் கருத்துகளை வலிந்தும் நலிந்தும் புகுத்தி வள்ளுவர் நோக்கத்திற்கு மாறாகத் திருக்குறட்பயனையே கெடுத்துவிட்டதனால்,

"திருத்தகுசீர்த் தெய்வத் திருவள் ளுவர் தம்
கருத்தமைதி தானே கருதி-விரித்துரைத்தான்
பன்னு தமிழ்தேர் பரிமே லழகனெனும்
மன்னும் உயர்நாமன் வந்து"

"... ... ... ... ... ... ... ... ... ... ... நூலிற்
பரித்த வுரையெல்லாம் பரிமே லழகன்
தெரித்த வுரையாமோ தெளி"

என்னும் பரிமேலழகருரைச் சிறப்புப்பாயிரம் உயர்வு நவிற்சி வகையிலும் பொருந்தாது.

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை"
(குறள். 41)

என்னும் குறளில், "இயல்புடைய மூவர்" என்னும் தொடருக்குப் பரிமேலழகர், "அறவியல்பினையுடைய ஏனை மூவர்க்கும்" என்று தொட ருரையும், "ஏனை மூவராவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங் காத்தலுமாகிய பிரமசரிய வொழுக்கத்தானும், இல்லை விட்டு வனத் தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யுமொ ழுக்கத்தானும் முற்றத் துறந்த யோக வொழுக்கத்தானு மென இவர்" என்று சிறப்புரையும் கூறியுள்ளார். இவற்றின் பொருந்தாமைக்குப் பல காரணங்கள் உள.