பக்கம் எண் :

குன்னம் சிதம்பரம் பிள்ளை 103

Lexicon) முற்றும் இடம்பெறவில்லையாயின், உலகவழக்குச் சொற்களைப்
பற்றிச் சொல்லவேண்டுவதேயில்லை. உழவு, கைத்தொழில், உலகியல்
முதலியன பற்றிய பல உலக வழக்குச் சொற்கள் கலைச்சொல்லாக்கத்திற்குப்
பெரிதும் பயன்படுவன. ஆகையால், முதலாவது நூல்வழக்கு, உலக வழக்கு,
கல்வெட்டு இம் மூன்றினின்றும் இதுகாறும் அகராதியிற் புகாத சொற்களை
யெல்லாம் தொகுத்துக்கொள்ளல் வேண்டும். இது செய்யாமற்
கலைச்சொல்லாக்குவது கருவியில்லாமற் கருமஞ்செய்வதே போலும்.

     "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

      நூலின்றிக் கோட்டி கொளல்."(குறள். 401)

     இரண்டாவது, செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைகளில், கலைச்
சொல்லாக்கத்திற்கு வேண்டியவற்றை யெல்லாம் தெரிந்துகொள்ளல்
வேண்டும். அதாவது, முன்னொட்டுகள், பின்னொட்டுகள், இடை
யொட்டுகள், ஈறுகள்
என்ற நாற்றிறப்பட்ட சொற்களின் அல்லது குறைச்
சொற்களின் பொருள்கள் பயன்களெல்லாவற்றையும் தெரிந்துகொள்ளல்
வேண்டும்.

     மூன்றாவது, அவ்வக் கலையில் தேர்ச்சிபெற்ற ஆங்கில அறிஞரைக்
கொண்டு மொழிபெயர்க்கவேண்டும். ஆங்கிலக் குறியீடுகளை யெல்லாம்
கலைவாரியாக எழுதுவித்துக்கொள்ளல் வேண்டும்.

     நாலாவது, முற்கூறிய மூவகைத் திறனும் ஒருங்கமைந்த திறவோர்,
ஒருங்கே யமர்ந்து தீர ஆய்ந்து, கலைவாரியாக மொழிபெயர்க்கவோ
சொற்புனையவோ வேண்டும்.

     ஒரு மொழியிலுள்ள சொற்கள் அசைநிலை, புணர்நிலை, பகு
சொன்னிலை, தொகைநிலை, பல்தொகைநிலை, பிரிநிலை என அறு
நிலைகளை யடையுமேனும், அவை யாவும் தனிநிலை, புணர்நிலை என
இரண்டா யடங்கும். தனிநிலையாவது சொற்களெல்லாம் தனித்தனியாக
அமைந்து கிடக்கும் நிலை; புணர்நிலையாவது அச் சொற்கள் இரண்டும்
பலவும் கூடிப் பகுசொற்களாயும் தொடர்மொழிகளாயும் புணர்ந்து நிற்கும்
நிலை; தனிநிலையாக்கம் பெரும்பாலும் பண்டைக்காலத்திலேயே
முற்றுப்பெற்றது. புணர்நிலையாக்கம் எக்காலத்திற்கும் உரியது. ஆதலால்,
சொற்களைப் பகுத்தாய்ந்து சொல்லாக்க முறைகளைக் கண்டுபிடித்து
அவற்றைக் கையாளின் எக்காலத்தும் இயற்கை முறைப்படியே வேண்டு
மளவு புதுச்சொற் புனைந்துகொள்ளலாம்.

     தமிழின் சொல்வளத்தை அறியாத சிலர், தமிழிற் போதிய சொல்
இல்லையென்றும், அதில் மொழிபெயர்த்தற்கு ஆங்கிலம் அல்லது
வடமொழி போன்ற அயன்மொழித் துணை இன்றியமையாததென்றும்
கூறுகின்றனர். இவர், கிரேக்கு இலத்தீன் முதலிய ஆரிய மொழிகளில்
செந்தமிழ் வேர்கள் செறிந்து கிடப்பதையும், ஆங்கிலக் கலைச்சொற்களின்
வேர்ப்பொருள் எளிமையையும், சொல்லமைப்பு நெறிமுறைகளையும், தமிழ்
நிகண்டுகளையும் அறிந்திருந்தால் இங்ஙனம் கூறார்.