பக்கம் எண் :

108மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

    எ-கா : note - நோட்டு.

     நோடு = பார், கவனி. நோடுவது நோட்டு, நோட்டம். நோட்டம்
என்னும் தொழிற்பெயர் தமிழிலும், நோடு என்னும் பகுதி அல்லது ஏவல்
கன்னடத்திலும் வழங்குதல் காண்க.

     15. ஓர் ஆங்கிலச் சொற்கு நேரான தமிழ்ச்சொல்லை அவ் வாங்கிலச்
சொல் குறிக்கும் பல பொருளிலும் வழங்கலாம்.

     எ-கா : article = உருப்படி = 1. பொருள் (சாமான்)

                              2. பண்டம்.

                              3. செய்திப் பகுதி.

     16. ஒரு பொருளின் பல கூறுகளைக் குறித்தற்கு ஒருபொருட் பல
சொற்களை ஆளலாம்.

     எ-கா :pork = பன்றிக்கறி. L. porcus, a pig.

           தும்பிக்கை = யானைக்கை. தும்பி = யானை.

     17. சில ஆட்பெயர்களையும், அவ் வாள்களைப்பற்றிய விதப்புச்
செய்திகளைக் குறிக்கும் சொற்களாக வழங்கலாம்.

     எ-கா:Boycott , from Captain Boycott who was
          excommunicated by his neighbours in Ireland in 1881.

     18. சொற்களை இயன்றவரை பொருள் மயக்கமின்றி அமைக்க
வேண்டும்.

     19. அயல் நாட்டினின்று வந்த பொருளுக்கு, அதன் அயன்மொழிப்
பெயரே அமையவேண்டுமென்பது யாப்புறவின்று.

     எ-டு:ostrich = தீக்கோழி.

          cycle = மிதிவண்டி.

     20. தமிழுக்கில்லாது பிறமொழிகட்குள்ள சொல்லாக்க முறைகளில்,
செந்தமிழ் இயல்பிற் கேற்றவற்றைத் தமிழிலும் தழுவிக்கொள்ளலாம்.

     ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாகப் பயன்
படுத்துவது பெரும்பான்மை. தமிழிலும், கரும்பு என்னும் சொல், கரும்பை
அல்லது அது போன்றதைத் தின்பதைக் குறிக்கும் வினைச் சொல்லாகவும்
வழங்குகின்றது.

     தொடர்பினால், வழிவழி வெவ்வேறு பொருள்களைக் குறிக்கும் ஆகு
பெயர்போன்றே, வெவ்வேறு வினைகளை அல்லது கருத்துகளைக் குறிக்கும்
ஆகுவினைகளுமுண்டு. ஆங்கிலத்திலுள்ள focus என்னும் சொல்
இலத்தீனில் அடுப்பு என்னும் பொருளது. அது ஆங்கிலத்தில் நெருப்பைச்
செலுத்தல், ஒரு பொருளைத் திருப்பல் என்னும் பொருள்களில்
வினையாகவும் வழங்குகின்றது. இம் முறையில் தமிழிலும் சொற்களை
வழங்கிக்கொள்ளலாம்.