பக்கம் எண் :

52மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

    கோணம் என்னும் தென்சொல்லே, கிரேக்கத்தில் 'gonia'(angle)
என்றும், அதன் வழியாய் ஆங்கிலத் தொடர்ச்சொற்களில் gon என்றும்
திரியும்.

     எ-கா:Trigonometry (திரிகோண மாத்திரை).
           polygon (பல கோணம்).

     கோண் என்பதன் நேர்மூலம் கோள்.

     ஒ.நோ: பெள் - பெண், வேள் - வேண்.

     கோள் = வளைவு, வட்டம், உருண்டை, உருண்டையான கிரகம்.

     ஊர்கோள் = மதியைச்சுற்றி ஊர்ந்துள்ள வட்டம்.

     கோள் என்னும் பகுதியினின்று, கோளம், கோளா, கோளகை முதலிய
சொற்கள் பிறக்கும்.

     வட்டக் கருத்தினின்று உருட்சிக் கருத்தும், உருட்சிக் கருத்தினின்று
திரட்சிக் கருத்தும் தோன்றும். வளைவு முற்றியதே வட்டம். கன வடிவான
வட்டமே உருண்டை.

     கோள் + அம் = கோளம். கோளம் = உருண்டை. பூகோளம்,
     குடகோளம், குணகோளம், அண்டகோளம் முதலிய தொடர்களில்
     கோளம் என்னும் சொல்லின் பொருளை நோக்குக.

     கோள் + ஆ = கோளா. 'ஆ' ஒரு தொழிற்பெயர் விகுதி.

     எ-கா: உண்+ஆ = உணா. இரு+ஆ = இரா. இருத்தல் = கருத்தல்.

    கோளா = உருண்டையான ஒருவகைச் சிற்றுண்டி.

     கோள் + அகை = கோளகை. கோளகை = உருண்டை. 'அகை' ஓர்
     ஈறு; 'வாடகை' 'கொட்டகை' என்பவற்றிற் போல.

     கோளம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கு அருகியமையாலும்,
வடமொழியில் வழக்குப் பெருகியமையாலும், வடசொற்கள்போலத்
தோன்றுகின்றன. இங்ஙனமே வடமொழிச் சென்ற பிற தென்சொற்களிற்
பலவும் என்க.

     ல, ள, ழ ஆகிய மூன்றும், முறையே பிஞ்சும், காயும், கனியும் போல,
மெலிந்தும் திரண்டும் முதிர்ந்தும் உள்ள ஒரே ஒலியின்
வேறுபாடுகளாதலின், சொற்களில் ஒன்றுக்கொன்று போலியாக வருவதுண்டு.

     எ-கா : வேலை-வேளை, பவளம்-பவழம்.

     இம் முறையில், கோள் என்னும் சொல், கோல் என்னும் வடிவும்
கொள்ளும். உண்மையில், கோல் என்பதே முந்தியதாகும்.

     கோல் = வளைவு, உருட்சி, திரட்சி. திரண்ட தடி, தடி, தண்டு, அடி,
     காம்பு. கோல்தொடி = திரண்ட வளையல்.

     கோல் + இ = கோலி. கோலி = உருண்டை, கல் மண் கண்ணாடி
     முதலியவற்றாலாய சிற்றுருண்டை.