பக்கம் எண் :

120வண்ணனை மொழிநூலின் வழுவியல்

      5. தமிழ்ப்பற்றாளரும் தமிழைச் செவ்வையாய் அறிந்த வருமான மறைமலையடிகள் வழியினர்க்குத் தகுந்த இடம் தரப்பெறாமை.
      6. தமிழ்ப் பகைவர் கட்டுரையாளராக இடம்பெற்றமை.
      கட்டுரைகள் அறிவியன் முறைப்பட்டனவும் புத்தம் புதிய ஆராய்ச்சியனவுமாக இருத்தல் வேண்டுமென்னும் வரம்பீடெல்லாம், தமிழின் பெருமைபற்றிய கட்டுரைகளைத் தடுத்தற்கும் தமிழைப் பழிக்கும் கட்டுரைகட்கு இடந்தரற்குமே யன்றி வேறன்று.
      தமிழ்நெடுங்கணக்கு கி.மு.10,000 ஆண்டுகட்கு முற்பட்டதகாவும் தொல்காப்பியம் கி.மு.7ஆம் நூற்றாண்டினதாகவும் இருக்கவும், அவை இவ்விரண்டும் கி.மு.2ஆம் நூற்றாண்டினவாக ஒரு தமிழ்ப் பகைவரால் அச்சிட்டுப் படிக்கப்பட்டது.
      தமிழறியாதவரும் தமிழை அரைகுறையாகவும் தவறாகவும் கற்றவருமான அயலார் தமிழறிஞர்க்கத் தமிழைப்பற்றி அறிவிக்க வந்தமை.
      பேரா.பில்லியோசா பண்டை நாளில் சமற்கிருதமே இந்தியப் பொதுமொழியாயிருந்த தென்றார்.
      ஆரியர் வந்தபின் சமற்கிருதம் தேவமொழியென்னும் ஏமாற்றினால் இன்றுபோல வழிபாட்டு மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் முன்பிருந்ததேயன்றி, பொது வழக்கு மொழியாகவோ அரசியன் மொழியாகவோ ஒரு போதும் இருந்ததில்லை. பேரா.பில்லியோசா கூறும் கவரிய மானியும் (Magneto-meter) மின்னிய லெதிர்ப்பும்(Electric resistance)தவப்பதையலைக் கண்டுபிடிக்க உதவுமேயன்றி, தமிழன் பிறந்தகத்தையும் உலக முதன்மொழி தோன்றிய வகைகையும் சொற்களின் வேர்களையும் கண்டுபிடிக்க உதவா.
      பேரா.பாசானி தமிழ் இருநூறு பாரசீகச் சொற்களைக் கடன் கொண்டுள்ள தென்றார்.
      சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் தொகுத்த பிராமணத் தமிழ்ப் பண்டிதர் தமிழுக்கு வேண்டாத ஆயிரக்கணக்கான அயற்சொற்களை அதிற் புகுத்தினதினாலேயே, பேரா.பசானி அங்ஙனங் கூற நேர்ந்தது. அவர் எடுத்துக்காட்டிய சொற்களுட் சில தமிழினின்று பாரசீகஞ் சென்றவை; பல தமிழுக்குத் தேவையல்லாதவை. தமிழ்ச்சொற்கள் பாரசீகத்தில் மட்டுமன்றி அதற்கு மூலமான செந்து(அவெத்த) விலுமுண்டு.