பக்கம் எண் :

124வண்ணனை மொழிநூலின் வழுவியல்

      தமிழகம் முழுவதும் ஏற்கெனவே மாவட்டந்தொறும் மாநகர்தொறும் திருக்குறட்கழகமோ திருவள்ளுவர் கழகமோ ஏற்பட்டு, ஆண்டுதோறும் அறிஞர் பலரால் ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்று வருகின்றன. இலக்கிய வகையில் திருக்குறள் சிறந்தது போன்றே, இலக்கண வகையில் தொல்காப்பியம் சிறந்ததாகும். தமிழ் பிற மொழிகட்கில்லாத பொருளிலக்கணங் கொண்டிருப்பதால், தொல்காப்பியம் மொழியிலக்கணம் மட்டுமன்றி மக்கள் வாழ்க்கை இலக்கணமும் வகுத்துக் கூறுவதாகும்.
      இனி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, தமிழுக்கு அளவற்ற கேடு செய்வதும் அயலாரையெல்லாம் கெடுப்பதுமாயிருத்தலால், அதை உடனே திருத்துதல் வேண்டும். தமிழுக்குச் சொற்பிறப்பியல் அகரமுதலி ஒன்றுமின்மையால், தமிழ் வளர்ச்சியின் பொருட்டும் மாணவர் கல்வியின் பொருட்டும் அதனையும் தொகுத்தல் வேண்டும். இவற்றுள் பின்னது முன்னதை ஓரளவு தன்னுள் அடக்குவதால், அதனையே முதற் கண் முடித்தல் வேண்டும்.
      ஆகவே, முப்பல்கலைக்கழகங்களுள்ளும், ஒன்றில் தொல்காப்பிய ஆராய்ச்சிக்கும் ஒன்றில் திருக்குறள் ஆராய்ச்சிக்கும் ஒன்றில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பிற்கும், திட்டம் வகுப்பதே அறிவுடைமைச் செயலாகும். இவற்றுள் கடைப்பட்டதே தலையாயதாம், தமிழின் தோற்ற வளர்ச்சிகளையும், சொல்வளத்தையும் தூய்மையையும் காட்டுதலின்.
      இனி, உண்மையான ஆராய்ச்சிக்கு, மதிக்கூர்மை, பரந்த கல்வி, நடு நிலைமை அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறியவா என்னும் ஆறும் இன்றியமையாத திறங்களாதலால், அவற்றை ஒருங்கேயுடையாரையே ஆராய்ச்சிப் பதவிக்கு அமர்த்துவதும், முதன்மையாகக் கவனிக்க வேண்டுவதொன்றாகும்.
      கோடிக்கணக்காகப் பணந்தொகுத்தும், வெளிநாட்டு விடை முகவர் (Delegates) நானூற்றுவர் வந்தும், 2ஆம் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் மறைமலையடிகள் வாழ்ந்த சென்னையில் நடந்தும், குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டதுபோல் தமிழுக்குக் கேடாகவே முடிந்தது. இதற்குக் கரணியம் மறைமலையடிகள் கூட்டத்தால் நடத்தப் பெறாமல் வையாபுரி கூட்டத்தால் நடத்தப்பட்டதே.