பக்கம் எண் :

86வண்ணனை மொழிநூலின் வழுவியல்

      (14) நீலாற்றின் மேற்பள்ளத்தாக்கை நடுவாகக் கொண்டு தெற்கே தங்கனியிக்கா வரையும் மேற்கே சதுவேரி வரையும் பரந்துள்ள, நிலப்பகுதியிற் பேசப்படும் மொழிக் குடும்பம் சரி - நீல் (Chari - Nile) என்பதாகும்.
      (15) சதுவேரியின் வடக்கும் கிழக்குமாகவுள்ள நிலப்பகுதியிற் பேசப்படும் மொழிக்குடும்பம் நடுச்சகாரம் (Central Saharan) எனப்படும்.
      (16) மேலையாப்பிரிக்காவின் பெரும்பகுதியிலும், பொதுவாக நடுக் கோட்டின் தென்பா லாப்பிரிக்காவிலும் வழங்கும் நைசர்ழு - காங்கோ (Niger - Congo) என்னும் மொழிக்குடும்பம் ஆப்பிரிக்காவில் முதற்றர முதன்மை வாய்ந்ததாகும். இதிற் பல கிளைகள் உள. அவற்றுள் நடுக் கிளையின் ஒரு பிரிவான பந்து (Bantu) மொழித்தொகுதி, மற்றெல்லா நைசர் - காங்கோ மொழிகளும் வழங்கும் மொத்த நிலப்பரப்பினும் பரந்த நிலப்பகுதியில் வழங்குவதும், வேறெத் தொகுதியினும் மிகுந்த மொழிகளையும் நடைமொழிகளையுங் கொண்டதுமாகும்.
      (17) தென்னாப்பிரிக்காவிற் பேசப்படும் புசுமன் (Bushman) மொழி களும் ஆட்டன்றாட்டு (Hottentot) மொழியும் வேறிரண்டும் சேர்ந்து காய்சன் (Khoisan) மொழிகள் எனப்படும்.
      (18) தென்னமெரிக்காவின் பழங்குடி மக்கள் மொழிகள் ஐரோப்பிய மொழிகளாற் பெரும்பாலும் வழக்கு வீழ்த்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வற்றுட் சிறந்த நான்குள் ஒன்று பிரசீல் நாட்டுப் பொதுக் கலவை மொழியாகும். இன்றுள்ளவை குடும்பப் பாகுபாட்டிற்கும் இடந்தராதனவாகும்.
      இடையமெரிக்க மொழிகளுள்ளும் பல வழக்கு வீழ்த்தப்பட்டுச் சிலவே எஞ்சியுள்ளன. அவற்றுள்ளும் ஒருசில வழக்கு வீழ்ந்து வருகின்றன.

வடஅமெரிக்க மொழிக்குடும்பங்கள்

      ஐரோப்பிய மொழிகளால் வழக்கு வீழ்த்தப்பட்டனவும் படாதனவுமான வடஅமெரிக்க மொழிகளைப்பற்றிப் பண்டையாசிரியரும் இற்றையா சிரியரும் வரைந்தும் வண்ணித்து முள்ளவற்றைத் துணைக்கொண்டு, கிளீசன் என்னும் அமெரிக்க மொழிநூலாசிரியர், தம் வண்ணனை மொழி நூலின் புகு முக விலக்கணத்திற் பின்வருமாறு மொழிக்குடும்பப் பாகுபாடு செய்துள்ளார்.