"யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்" (அகம். 149: 9 - 10) என்பது, கிரேக்கரும் உரோமரும் பொன் கொண்டு வந்து மிளகு வாங்கிச் சென்றதையும். "விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும்" (மதுரைக். 321 - 23) என்பது அரபியரும் பிறரும் குதிரை கொண்டு வந்து அணிகலம் வாங்கிச் சென்றதையும் கூறும். 12. அரசியல் முதற் காலத்தில், முழுகிப் போன குமரிக்கண்டம் முழுவதும் பாண்டி நாடாகவும், குமரிமுனை முதல் பனிமலை வரையும் குடபாதி சேரநாடாகவும் குணபாதி சோழநாடாகவும், இருந்தன. பழம் பாண்டிநாடு, தென்பாலி நாடு முதல் குமரியாறு வரை எழுநூறு காதம் (2001 கல்) நீண்டிருந்தது. பாண்டியன் அதை யிழந்த பின், பிற்காலத்துப் பாண்டி நாடாகிய நெல்லை மதுரை முகவை மாவட்டப் பகுதியை, சோழநாட்டினின்றும் கைப்பற்றி யாண்டான். இதன் உண்மையை, "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்று மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்" (கலித்.104) என்னும் முல்லைக்கலித் தரவாலும், "அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமு மென்னு மிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன்" என்னும் அடியார்க்கு நல்லார் உரையாலும் (சிலப். பக். 303) அறிக. குமரிக்கண்டம் முழுகி, வடநாட்டுக் கொடுந்தமிழ் திரவிட மாகத் திரிந்து வடநாடு மொழிபெயர் தேயமான பின் தமிழகம் மிகச் சுருங்கிவிட்டது. முதற்காலத்தில் பாண்டிநாடு ஐம்மண்டலங்க ளாகவும், சோழநாடு புனல் மண்டலம் (புன்னாடு) தொண்டை மண்டலம் என இரு மண்டலங்களாகவும், சேரநாடு மலைமண்டலம் கொங்கு மண்டலம் என இரு மண்டலங்களாகவும், பிரிக்கப்பட்டிருந்ததாகக் தெரிகின்றது. பாண்டியன் ஐந்துணையரசரைக் கொண்டு ஆண்டதால், பஞ்சவன் எனப்பட்டான். |