"பழியொடு படராப் பஞ்சவ வாழி" (சிலப். 20:33) அஞ்சவன் என்ற சொல்லே பஞ்சவன் என்று திரிந்திருத்தல் வேண்டும். ஒ.நோ: அப்பளம் - அப்பளமு. அப்படமு (தெ.); அப்பள, பப்பள (க.); பப்படம்(ம.); பர்ப்பட்ட (வ.); அப்பா -E. papa . அப்பளித் துருட்டுபவது அப்பளம். அப்பளித்தல் - சமனாகத் தேய்த்தல். பாண்டியனைக் குறிக்கும் பஞ்சவன் என்னும் பெயர் ஒருமை யென்றும், பாண்டவரைக் குறிக்கும் பஞ்சவர் என்னும் பெயர் பன்மை யென்றும், வேறுபாடறிதல் வேண்டும். தொண்டைண்டலம் சோழர் ஆட்சியினின்று நீங்கினது போன்றே, கொங்குமண்டலமும் சேரர் ஆட்சியினின்று பிற்காலத் தில் நீங்கிவிட்டது. கொங்குமண்டலம் முதலிற் சேரநாட்டின் பகுதி யாயிருந்தமை, கொல்லிச் சிலம்பன் என்னும் சேரன் பெயராலும், சேரர் குடியினனான அதிகமான் தகடூரை ஆண்டதினாலும், "சேரர் கொங்குவை காவூர்நன் னாடதில்" என்று அருணகிரிநாதர் பாடி யிருப்பதாலும், வஞ்சிக்குக் கருவூர் என்னும் பெயருண்மையாலும், பிறவற்றாலும் அறியப்படும். ஒவ்வொரு நாடும் பல கோட்டம் அல்லது வளநாடு என்னும் பெரும் பிரிவுகளாகவும், ஒவ்வொரு பெரும் பிரிவும் பல கூற்றம் அல்லது நாடு என்னும் சிறு பிரிவுகளாகவும், பிரிக்கப்பட்டிருந்தன. முத்தமிழ் நாடும் ஒரே வேந்தனது ஆட்சிக்குட்பட்ட பிற்காலத்தில், ஒவ்வொரு தமிழ்நாடும் ஒரு பெரு மண்டலமாகக் கருதப்பட்டது. இந் நிலைமை முற்காலத்தில் இல்லை. ஆட்சிபற்றி முந்நாடும் வேறுபட்டவேனும், மொழிபற்றித் தமிழகம் என ஒன்றுபட்டே யிருந்துவந்தன. ஒவ்வொரு கூற்றமும் அதையொத்த நாடும் பல தனியூர்களாகவும் பல சிற்றூர்கள் சேர்ந்த பற்றுகளாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. தனியூர் ஊராட்சியும், பற்று ஊராட்சியொன்றியமும் ஒத்தன. ஒவ்வொரு தனியூரிலும் அல்லது பற்றிலும், ஊரவை என்ற அடிப்படை யாட்சிக்குழு இருந்தது. அது ஆண்டுதோறும் திருவுளச் சீட்டுப் போன்ற குடவோலையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. குற்ற வாளிகளும் பொறுப்பற்றவர்களும் அதில் இடம்பெறவில்லை. ஊராட்சியின் ஒவ்வொரு துறையையும் கவனிக்க, வாரியம் என்னும் உட்குழு அமைக்கப்பட்டது. அவ் வாரியங்கள் ஏரி வாரியம், கலிங்கு வாரியம், கழனி வாரியம், தோட்ட வாரியம், குடும்பு வாரி யம், பொன் வாரியம், கணக்க வாரியம், கோயில் வாரியம், தடிவழி |