| வேய்ந்தோன்-வேந்தன். வேய்தல்-முடியணிதல். கொன்றை வேய்ந்தோனான சிவனைக் கொன்றை வேந்தன் என்று ஒளவையார் கூறுதல் காண்க. மூவேந்தரும் அவர் குடும்பத்தினரும் பொதுவாகக் கோக்கள் எனப்படுவர். குடவர்கோ, கோப்பெருஞ்சோழன், கோயில், கோப் பெருந்தேவி, இளங்கோவடிகள் என்னும் பெயர்களை நோக்குக. கோவன் - கோன் - இடையன். இடையன் ஆடுகளைக் காப்பது போல் மக்களைக் காக்கும் அரசன். கோன் - (Turk. khan) (கான்) என்பர் கால்டுவெல். கோன் - கோ. மூவேந்தரும் ஐம்பெருங்குழு, எண்பேராயம், உறுதிச் சுற்றம் என மூவகைப்பட்ட பதினெண்கணத் துணைவருடன், ஆட்சி செய்து வந்தனர். அமைச்சர், போற்றியர், படைத்தலைவர், தூதர், ஒற்றர் என்பவர் ஐம்பெருங் குழுவார். அமைச்சர் அரசியல் வினைகளை அமைப்பவர் அல்லது அரசனுக்கு நெருங்கியிருப்பவர். அமைதல்-நெருங்குதல். போற்றியர் தமிழப் பூசாரியர். பிராமணர் வந்தபின், போற்றியர் இடத்தில் புரோகிதர் அமர்த்தப்பட்டார். தூதன் என்பது முன் செல்பவன் என்று பொருள்படும் தென்சொல். தூது - தூதன். இவ் விருசொல்லும் வடமொழியில் தூத (duta) என்று திரியும். கணக்கர், கருமத் தலைவர், பொன் சுற்றத்தார் அல்லது பொக்கச சாலையர், வாயிற் காவலர், நகர மாந்தர், படைத் தலைவர், குதிரை மறவர், யானை மறவர் என்பவர் எண்பேராயத்தார். இதிற் படைத்தலைவர் என்பார் தேர்ப்படைத் தவைராயிருக்கலாம். ஆருயிர் நண்பர், அந்தணர், சமையற்காரர், மருத்துவர், கணியர் என்பவர் உறுதிச் சுற்றத்தார். இனி, அறிவாலும் அகவையாலும் மூத்த பெரியோரை அரசர் அறிவுரையாளராக அமர்த்திக்கொள்வது முண்டு. அவர் முதுகண் எனப்படுவர். ஒவ்வோர் அரசியல் துறையும் திணைக்களம் (Department) எனப்பட்டது. அரசிறைத் திணைக்களத் தலைவன் புரவுவரித் திணைக்கள நாயகம் எனப்பட்டான். நிலவரி, தொழில்வரி, வணிகப் போக்குவரத்து வரி, நல்லா நல்லெருது முதலிய இயங்குதிணை வரி, திருமண வரி (கலியாணக் காணம்), காவல் வரி முதலிய பலவகை வரிகள் குடிகளிடம் வாங்கப்பட்டன. நாடுகூறு என்பவன் நிலத் தீர்வையைத் திட்டஞ் செய்பவன். வரியிலார் என்பவர் வருகின்ற வரித்தெகைகளை வாங்கிப் பதிவு செய்பவர். வரிக் கூறிடுவார் |