| என்பவர் பதிவு செய்த வரித் தொகைகளைப் பங்கிடுபவர் அல்லது பாகுபாடு செய்பவர். வரிப் பொத்தகம் என்பவன் நிலவரிக் கணக்கன். புரவு வரி என்பவன் பிற வரிக் கணக்கன். நிலவரி விளைவில் ஆறிலொரு பங்கு கூலமாகவும், பிற வரிகள் குறிப்பிட்ட பணத் தொகையாகவும், வாங்கப்பட்டன. ஊரவையார் அவற்றை வாங்கித் தலைநகரிலுள்ள பண்டாரத்திற்கும் பொக்கசசாலைக்கும் அனுப்பி வந்தனர். நிலவரியைத் திட்டஞ்செய்ய நிலங்கள் எல்லாம் துல்லியமாய் அளக்கப்பட்டன. வேந்தன் அமைதிக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பகலில் முதல் பத்து நாழிகை கொடைக்கும், இடைப் பத்து நாழிகை வழக்குத் தீர்த்து முறை செய்வதற்கும், கடைப் பத்து நாழிகை தன் இல்லற இன்பத்திற்கும் செலவிட்டான். அவன் காலையில் எழுந்தவுடன் பள்ளியெழுச்சி முரசம் அறையப்படும். எட்டர் என்பவர், அவனுக்கு நாழிகை யறிவிப்பவர். அகவர் (சூதர்) என்பவர், நின்று கொண்டு அவன் முன்னோர் பெருமையைக் கூறி அவனைப் புகழ்ந்து பாடுபவர். ஓவர் (மாகதர்) என்பவர், இருந்துகொண்டு அங்ஙனம் பாடுபவர். ஏத்தாளர் பிற சமையங்களிற் புகழ்ந்து பாடுபவர். வேந்தன் தன் கொலுமண்டபத்திற்குச் செல்லும்போதும், அங்கு அமர்ந்திருக்கும்போதும், அதினின்று மீளும்போதும், மெய் காவலர் பக்கத் துணையாவர். பிற நாட்டரசரும் அவர் தூதரும் குறுநில மன்னரும் பதினெண் கணத்தாரும் திணைக்களத் தலை வரும் நாட்டுப் பெருமக்களும் கூடிய கொலுமண்டபத்தில், அரசு கட்டில் என்னும் அரியணையில் வேந்தன் வீற்றிருக்கும் கொலு ஓலக்கம் எனப்படும். காலைக் கொலு நாளோலக்கம் என்றும், அரிதாய்க் கூடும் மாலைக் கொலு அல்லோலக்கம் என்றும் பெயர் பெறும். கொடை வேளை கொடை முரசும், முறை வேளை முறை முரசும் அறைந்து தெரிவிக்கப்பெறும். வேந்தன் அரசியற் பணியில் ஈடுபட்டிருக்கும் போதெல்லாம், சில அதிகாரிகள் அவனுடனிருப்பர். அவர் உடன்கூட்டத்தார் எனப்படுவர். வேந்தன் அவ்வப்போது இடும் கட்டளைகளைத் திருவாய்க் கேள்வி என்பவர் கேட்டு வந்து, எழுத்தாளரிடம் அறிவிப்பார். வேந்தன் கட்டளைகளை எழுதுபவர் திருமந்திரவோலை என்பார். அவருக்குத் தலைவராயிருப்பவர் திருமந்திரவோலை நாயகம் எனப்படுவர். நாள்தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக் குறிப்பில் எழுதி வைப்பவர் பட்டோலைப் பெருமான். ஊரவைகளினின்றும் பிற அதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஓலைகளைப் படித்துப் பார்த்து, அவற்றிற்குத் தக்க விடையனுப்புவோர் விடையிலார் என்போர். |