13. கல்வி கல்வி ஒரு குலத்தார்க்குமட்டும் என்று வரையறுக்கப்படாது, எல்லாத் தொழில் வகுப்பார்க்கும் பொதுவாயிருந்தது. இதை, "தந்தை மகற் காற்றும் நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல்" (67) என்னும் குறளாலும், "ஈன்றுபுறந் தருதல் என்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே." (புறம்.312) வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பா லொருவனும் அவன்கட் படுமே" (புறம்.183) என்னும் புறப்பாட்டுகளாலும், பல்வேறு தொழிலார் கடைக் கழகக் காலத்துப் புலவரா யிருந்தமையாலும், அறியலாம். கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார், அறுவை வாணிகன் இளவேட்டனார், இளம் பொன் வாணிகனார் மருத்துவன் தாமோதரனார், தண்காற்பூட் கொல்லனார், ஓலைக்கடைக் கண்ணம்புகுந்தாராயத்தனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் முதலிய புலவர் பல்வேறு தொழிலாரா யிருந்தமை காண்க. கல்வி பெண்டிர்க்கு விலக்கப்படவில்லை. ஒக்கூர் மாசாத்தியர், ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி. நக்கண்ணையார், பாரி மகளிர், பூதப் பாண்டியன் தேவியார், பேய்மகள் இளவெயினி, மாறோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக் கண்ணியார் முதலியோர் பெயர் வெளிவந்த கடைக்கழகக் காலப் புலத்தியர். அக்காலத்துக் குடித்தனப் பெண்டிர் தம் கல்வியறிவை யெல்லாம் இல்லறத்திற்கே பயன்படுத்தியமையால். அவருட் பெரும்பாலார் பெயர் வெளிவரவில்லை. காரைக்காலம்மையார் சிறந்த புலத்தியரா யிருந்தும், கணவரால் விலக்கப்படும்வரை, அவர் பாவன்மை வெளிப்படாதிருந்தமை காண்க. சிவப்பிரகாச அடிகள் காலமான பதினேழாம் நூற்றாண்டிலும், திருக்காட்டுப்பள்ளியில் தெருவில் உப்பு விற்கும் பெண் ஒருத்தி, அடிகள் "நிறைய வுளதோ" என்று பாடி வினவிய வெண்பாவிற்கு விடையாக, |