பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்109

பெயர்கள் தோன்றின. ஆசிரியன் என்னும் சொல்லை, ஆ - சார்ய (a-carya) என்று பிரித்தும் திரித்தும் வடசொல்லாக்குவர்.

குரு = 1. பருமன். 2. கனம்.
"பசுமட் குரூஉத்திரள் போல" (புறம்.32)

3. பெருமை (உரி.நி.). 4. அரசன் (பிங்.)
5. ஆசிரியன் (சூடா.). 6. தந்தை.

"குருமொழி சிரத்தில் தாங்கினான்" (காஞ்சிப்பு. இரேணு.11)
குரு - குருசில் - குரிசில் = பெருமையிற் சிறந்தோன், தலைவன்.
"போர்மிகு குருசில்" (பதிற்.31:36)
"போர்மிகு பொருந குரிசில்" (திருமுருகு.276)
குரு - குருவன் = சமய வாசிரியன்.
ஒ.நோ: சிறு - சிறுவன்.
"வானோர் குருவனே போற்றி" (திருவாச. 5:68)

   குருவன் - குரவன் = பெரியோன். அரசன், ஆசிரியன், தந்தை, தாய், தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவர் எனப்படுதலையும்;இரு பெற்றோரும் இருமுது குரவர் எனப்படுதலையும் நோக்குக.

   குரு என்னும் சொல்லிற் ககரத்தை எடுத்தொலித்தும், குரவன் என்னும் சொல்லில் அதனோடு ஈறு திரித்தும், வடசொல்லாகக் காட்டுவர். குருசில் (குரிசில்) குருவன் என்ற வடிவுகள் வடமொழியில் இல்லை.

   அக்காலத்திற் பெரும்பாலும் ஒவ்வோர் ஊரிலும் கணக்காயர் பள்ளி இருந்தது.

"கணக்காயர் இல்லாத வூரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை யில்லா அவைக்களனும் - பாத்துண்ணும்
தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல"
(திரிகடு.11)

   கணக்காயர் பள்ளி பிற்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூட மாகச் சிறுத்தது.

   கணக்காயனிடம் கற்போனுக்கு மாணி, சட்டன், ஓலைக் கணக்கன் என்றும், ஆசிரியனிடம் கற்போனுக்கு மாணவன், கற்றுச்சொல்லி, மழபுலவன் என்றும்,குரவனிடம் கற்போனுக்குக் கேட்போன் என்றும் பெயர்.