| மணி என்பது சிறுமை அல்லது குறுமைப் பொருள்தரும் முன்னொட்டு. மணிக்குடல், மணித்தக்காளி, மணிப்புறா என்னும் வழக்கை நோக்குக. மணி - மாணி = சிறுவன், கற்போன். சட்டம் = எழுதும் ஓலை. சட்டம் - சட்டன் = ஓலைச்சுவடி படிப்போன். சட்டநம்பி = திண்ணைப்பள்ளி மாணவர் தலைவன். சட்டநம்பிப் பிள்ளை - சட்டாம்பிள்ளை. "ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்" என்பது நாலடியார்(397). "ஒரு சட்டனை ஒரு சட்டன் பிழைக்கப் பேசுவானாகில்" என்பது கல்வெட்டு (T.A.S.I.I. 9) சட்டன் என்னும் சொல்லைச் சாத்ர (chatra) என்று திரித்து, அதனையே தென்சொற்கு மூலமாகக் காட்டுவர் வடமொழியாளர்! மாணி - மாணவன் - மாணவகன் - மாணாக்கன். மாணவன் மாணவ(வ.). மாணவகன் - மாணவக(வ.). மாணி - மாணாக்கன் என்னும் வடிவங்கள் வடமொழியில் இல்லை. மாணவம் என்பது கல்வி. கற்கப்படும் ஏட்டுக் கற்றைகள் ஏடு. சுவடி, பொத்தகம், பனுவல், நூல் எனப் பலபெயர் பெறும். முன் மூன்றும் ஓலைக் கற்றையைச் சிறப்பாகவும், பின்னிரண்டும் உட்பொருளைச் சிறப்பாகவும், குறிக்கும். பொத்தகம் என்பதே பழைய வடிவம். "நிறைநூற் பொத்தகம் நெடுமணை யேற்றி" (பெருங். உஞ்சைக்.34:26) "வரிநெடும் பொத்தகத்து" (கோயில் நான்மணி மாலை) வரிப் பொத்தகம் (T.A.S.I.I. 166) பொத்துதல் சேர்த்தல். சுவடி சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக. பொத்தகம் - புஸ்தக (வ.) - புஸ்தக்(இ.). பனுவல் பாடல் (பிரபந்தம்). நூல் என்பன இலக்கணமும் அறிவியலும். கற்கும் இடங்கள் பள்ளி (திவ். பெரியதி. 2:3:8) என்றும், ஓதும் பள்ளி (திவா.) என்றும், கல்லூரி (சீவக. 995) என்றும் பெயர் பெற்றன. பள்ளி = படுக்கை, படுக்கையறை, படுக்கும் வீடு. வீடு போன்ற கோயில் அல்லது மடம், கல்வி கற்கும் மடம், கல்விக்கூடம். பள்ளி-பல்லி (வ.). |