பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்111

பள் = பள்ளம், தாழ்வு, தாழ்வாகக் கிடத்தல்,தூங்குதல்.

   பள் - படு - படை, படுக்கை.

   கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பிருந்தது. வேந் தரைப் புகழ்ந்து பாடிய புலவர்க்குச் சிறந்த பரிசும் முற்றூட்டும் (சர்வ மானியமும்) அளிக்கப்பட்டன.

   பாண்டியர் தலைசிறந்த புலவரை யெல்லாங்கூட்டி, தமிழ்க் கழகம் நிறுவிப் போற்றினர்.

   புலவரின் பாடல்களும் நூல்களும், பாண்டியர் தமிழ்க் கழகத்தில் குற்றமற்றவையென ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய, உலகில் வழங்கா. அங்ஙனம் ஒப்பம் பெறுதல் அரங்கேற்றம் எனப்பட்டது.

   நாடகக் கணிகையரின் ஆடல்பாடல்களும் வேந்தர் முன்னி லையிலேயே அரங்கேற்றப்பட்டன. அரங்கேறிய கணிகையர் தலைக்கோற்பட்டமும் ஆயிரத்தெண் கழஞ்சு பரிசமும் பெற்றனர்.

   இத்தகைய அரங்கேற்ற முறையால், அக்காலத்துக் கல்வி தலைசிறந்திருந்தது. அரைப் படிப்பினரும் திரிபுணர்ச்சியரும் தலை யெடுக்க இடமில்லை, பல துறையிலும் புலமை பெற்ற பேரறிஞர், தவறாகக் கற்பித்து மக்களைக் கெடுப்பவரைக் கொடிகட்டி அறைகூவி வரவழைத்து, சொற்போர் புரிந்து தோற்கடித்துத் தண்டித்து அறிவு புகட்டுவதும் அக்கால வழக்கம்.

"பல்கேள்வித் துறைபோகிய
 தொல்லாணை நல்லாசிரியர்
 உறழ்குறித் தெடுத்த உயர்கெழு கொடி"
(பட்டினப்.167-71)

   (கடைக்கழகக் காலத்துப் பல்வேள்வி முதுகுடுமிப் பெரு வழுதி ஆரியத்தைப் போற்றித் தமிழைப் புறக்கணித்த பின், கழகம் கலைக்கப்படடது. பிழைப்பு வழியில்லாப் புலவரெல்லாரும், பெரும்பாலும் சிற்றரசரை யடுத்தும் புகழ்ந்தும் வாழ்ந்தனர்.)

   கல்வி என்னும் சொல், கல் என்னும் முதனிலையினின்று தோன்றியதாகும். கல்லுதல் தோண்டுதல், மாந்தன் முதன்முதற் கற்ற கல்வி உழவுத்தொழிலாதலால், கல்வி என்னும் சொல் முதலில் உழவுத்தொழிலையே குறித்திருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் நிலப் பண்பாட்டையும் உளப்பண்பாட்டையும் ஒருங்கே உணர்த்தும் culture, cultivation என்னும் இரு சொற்களும், col என்னும் ஒரே இலத்தீன் வேர்ச் சொல்லினின்று தோன்றியிருப்பது, இங்குக் கவனிக்கத் தக்கது. கல்-
col - culture.