பக்கம் எண் :

112பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

14. கலைகள்

   பயிற்சியாற் கற்கப்படுவன கலைகள்.

(1) இசை

   குமரிக்கண்டத் தமிழர் நுண்மாண் நுழைபுலத்தராயும் தலைசிறந்த நாகரிகராயும் எஃகுச் செவியராயு மிருந்ததினால், ஏழு பேரிசையும் ஐந்து சிற்றிசையுமாகிய பன்னீரிசையை (சுரத்தை)யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழுபாலைப் பண்களைத் திரித்ததுமன்றி, அப் பன்னீரிசையையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும் சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும், நுட்பமாய்ப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருக்கினறனர். பன்னீரிசைக்கு மேற்பட்ட நுண்ணிசையினை எடுத்துக் கூறும் நூலே இசைநுணுக்கம் போலும்! ஏழிசையும் குரல், துத்தம், கைக்களை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயர் பெற்றன. சிற்றிசை ஆகணம் என்றும், குரலும் இளியுமல்லாத பேரிசை அந்தரம் என்றும் சொல்லப்பட்டன.

   திரி, சதுரம் என்னும் சொற்கள் தமிழே என்பது என் வடமொழி வரலாற்றில் விளக்கப்பெறும். சதுர் என்பது, நான்கு என்னும் எண்ணுப் பொருளிலன்றி, நாற்கோணம் என்னும் வடிவுப்பொருளில் வடமொழியிலில்லை.

   அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்னும் பண்வகுப்பும், கிழமை நிறைகுறை என்பனவும், தமிழரின் இசைநுணுக்கத்தைக் காட்டும்.
இக்காலத்து ஆரிய இசையறிஞர், பண்டைத் தமிழரின் அறிவு நுணுக்கத்தை ஓராது, தம்போல் அவரையுங் கருதி 96 இசைகள் பாடற்கியலாதவை என்பர்.

  இசைக்கருவிகள் தோல், துளை, நரம்பு, வெண்கலம் (கஞ்சம்) என நால்வகைப்பட்டிருந்தன.

   தோற்கருவிகள் ஆடல் முழா, பாடல் முழா, பொது முழா என்றும்; அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாள் முழவு, காலை முழவு என்றும்; மணப்பறை, பிணப்பறை என்றும் வகுக்கப்பட்டிருந்தன. பறை என்பது தோற்கருவிப் பொதுப்பெயர்.

"தெய்வம் உணாவே மாமரம் புட்பறை" (தொல்.964)

   இன்னிசைத் துளைக்கருவிகள் புல்லாங்குழல், இசைக்குழல் (நாதசுரம்), முகவீணை என்னும் ஏழிசைக் குழல்களாகவும்; ஒத்து