| குரல் என்பது ம என்னும் 5ஆம் இசையென்றும், ஒரு நரம்பில் ஒரேயிசை யெழூஉம் நரப்புக்கருவியே தமிழரது என்றும், கூறுவார் தமிழராயினும் இசைத்தமிழ் அடிப்படையே அறியாதார் ஆவர். "குரல்முதலேழும்" என்று இளங்கோவடிகளும் (சிலப்.5: 35), "முதற்றான மாகிய குரலிலே" என்று புறநானூற்று உரையாசிரியரும் (புறம்.11), "மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி" என்று வன்பரணரும் (புறம்.152),கூறியிருத்தலையும், அவர் கவனித்திலர். குரல் என்னும் சொல்லே, இயல்பான குரலாகிய முதலிசை யையே குறிக்கும். சுரையாழும் பெருங்கலமுமே வில்யாழ் (Harp) போல் மெட்டின்றி ஓரிசைக் கொருநரம்பு கொண்டவை. பேரியாழ் முதலிய பிற யாழெல்லாம் மெட்டுகளோடுகூடி, ஒரே நரம்பில் பலவிசை யிசைக்கக்கூடிய பண்மொழி நரம்புகள் கொண்டன வாகவே தெரிகின்றன. பண்களை, ஏழிசையு முள்ளவை பண் என்றும், ஆறிசை யுள்ளவை பண்ணியல் என்றும், ஐயிசையுள்ளவை திறம் என்றும், நாலிசையுள்ளவை திறத்திறம் என்றும், நால்வகையாக வகுத்திருந் தனர். இந் நால்வகைப் பண்களும் மொத்தம் 11,991 எனக் கணிக்கப் பட்டிருந்தன. "இசையாவது, நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோரா யிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசை களும்; அவையாவன: "உயிருயிர்...கடனே" என்னுஞ் சூத்திரத்தான் உறழ்ந்து கண்டுகொள்க" என்று சிலப்பதிகார அருஞ்சொல் லுரைகாரர் (ப.64) கூறியிருத்தல் காண்க. பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்பன நாற்பெரும் பண்கள். இவற்றுள் ஒவ்வொன்றும் பல திறங்களாகவும் ஒவ்வொரு திறமும் பல வகைகளாகவும் பகுக்கப்பட்டிருந்தன. ஏழிசையும் சேர்ந்த ஒரு வரிசை அல்லது கோவை நிலை யெனப்படும். சிறந்த பாடகரின் தொண்டையில் கீழும் இடையும் மேலுமாக முந்நிலையிருப்பதால், அவற்றிற்கேற்ப நால்வகைச் சிறப்பியாழும் நரம்பும் மெட்டும் அமைக்கப்பெற்றன. முந்நிலை யும், முறையே மெலிவு, சமன், வலிவு எனப் பெயர் பெற்றன. நால் வகை யாழிலும் மெட்டுத்தொகை வேறுபட்டிருந்ததாகத் தெரிகின்றது. பண்மொழி நரம்பு ஏழும் ஒற்று நரம்பு மூன்றும் ஆர்ப்பு நரம்பு பதினொன்றுமாக, 21 நரம்புகள் பேரியாழிலும்; பண்மொழி நரம்பு இரண்டு குறைந்து 19 நரம்புகள் மகரயாழிலும்; ஆர்ப்பு நரம்பு ஐந்து குறைந்து 14 நரம்புகள் சகோடயாழிலும்; ஆர்ப்பு நரம்பு அடியோடு இல்லாதும் பண்மொழி யிரண்டு குறைந்தும் இற்றை வீணையிற்போல் 7 நரம்புகள் செங்கோட்டியாழிலும் இருந்ததாகக் கருதலாம். |