பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்117

நட்டம் - நட்டணம், நட்டணை.
நட்டம் - நட்ட(பிரா.).
ஒ.நோ: வட்டம் - வட்டணம், வட்டணை.
நட்டணம் - நர்த்தன (வ.).
நட்டம் - நட்டுவன். ஒ.நோ: குட்டம் - குட்டுவன்.
நடி - நடனம். ஒ.நோ: படி - படனம் = படிப்பு.
நடி - நாடகம். ஒ.நோ: படி - பாடகம் = பாதத்திற் படிந்து கிடக்கும் அணி.

   முத்தமிழ் தொன்றுதொட்ட இயலிசை நாடகம் என்றே வழங்கும்.

   நாடகக் கலை கூத்து, நடனம், நாடகம் என முத்திறப்படும்.

   குதித்தாடுவது கூத்து. அது வேத்தியல், பொதுவியல்; உலகியல், தேவியல்; வசைக் கூத்து, புகழ்க் கூத்து; வரிக்கூத்து, வரியமைதிக் கூத்து (வரிச்சாந்திக் கூத்து); அமைதிக் கூத்து (சாந்திக் கூத்து), வேடிக்கைக் கூத்து(விநோதக் கூத்து); அகக்கூத்து, புறக்கூத்து, விளையாட்டுக் கூத்து, வினைக்கூத்து; வெற்றிக்கூத்து, தோல்விக் கூத்து; எனப் பல்வேறு வகையில் இவ்விரு வகைப்படும்.

   நடனம் அல்லது நடம் என்பது, அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற்கரணங்களோடும் கைகால் கண்வாய் முதலிய உறுப்புகளின் தொழில்களோடும் கூடியது. கைவினைகள் எழிற்கை தொழிற்கை, பொருட்கை என முத்திறப்பட்டு, பிண்டி அல்லது இணையா வினைக்கை யெனப்படும். ஒற்றைக்கை வண்ணம் முப்பத்து மூன்றும், பிணையல் அல்லது இணைக்கை யெனப்படும் இரட்டைக் கைவண்ணம் பதினைந்தும் கொண்டனவாகும்.
நடம் நடனம் என்னும் தென்சொற்கள், வடமொழியில் ,நட்ட நட்டன என்று வலிக்கும். நட்ட என்பதினின்றும் நாட்ய என்னும் சொற் பிறக்கும்.

   நடி என்னும் முதனிலை வடமொழியில் இல்லை. நிருத்த என்னும் சொல்லின் ந்ருத் என்னும் அடியையே முதனிலையாக ஆள்வர்.

   தமிழ் நடனம் இன்று பரத நாட்டியம் என்று வழங்குகின்றது. பரத சாத்திரம் வடமொழியில் இயற்றப்பட்டது கி.மு 4ஆம் நூற்றாண்டாகும். அதற்கும் முந்தியது தமிழ்ப் பரதமே யென்பதை, "நாடகத்தமிழ்நூலாகிய பரதம் அகத்திய முதலாவுள்ள தொன் னூல்களு மிறந்தன," என்று அடியார்க்குநல்லார் சிலப்பதிகார வுரைப் பாயிரத்திற் கூறியிருப்பதால் அறிந்துகொள்க.