"மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்புசேர் உடம்பினர்" (பதிற்.42:2-5) [கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவெள்ளூசி = குளத்திலே முழு சிச்சிலிக் குருவி எழுகின்றகாலத்து அதன் வாய லகைப் போல, புண்களை நூலால் தைக்கும் போது அப் புண்ணின் அரத்தத்தில் மறைந்தெழுகின்ற நீண்ட வெள்ளையான ஊசி. நெடுவசி = நீண்ட ஊசித்தழும்பு. வடு = காய்ப்பு.] என்னும் பதிற்றுப்பத்தடிகளாலும், "உடலிடைத் தோன்றிற் றொன்றை யறுத்ததன் உதிர மூற்றிச் சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தனால் துயரம் தீர்வர்" (கம்பரா.கும்ப.146) "ஆரார் தலைவணங்கார் ஆரார்தம் கையெடார் ஆரார்தாம் சத்திரத்தில் ஆறாதார் - சீராரும் தென்புலியூர் மேவும் சிவனருள்சேர் அம்பட்டத் தம்பிபுகான் வாசலிலே தான்." என்னும் கம்பர் பாட்டுகளாலும் அறியப்படும். மருத்துவத்தின் இன்றியமையாமை யறிந்தே, பண்டைக் காலத்தில் ஊர்மருத்துவனுக்கு இறையிலி நிலம் மானியமாக விடப்பட்டது. அது மருத்துவப்பேறு எனப்பட்டது. (S.I.I, II. 43). உலகிற் சிறந்த சித்தமருத்துவம், ஊக்குவாரின்றி நாளுக்கு நாள் மறைந்தும் குறைந்தும் வருகின்றது. குழந்தை மருத்துவம், பேறுகால மருத்துவம், அரச மருத்துவம் (விலக்கமற்றது), நஞ்சு மருத்துவம். மாட்டு மருத்துவம் என்பன, சித்த மருத்துவத்தின் சிறப்புக் கூறுகளாகும். விலக்கம் பத்தியம். நீர்,கருக்கு (கசாயம்), குழம்பு,நெய் அல்லது எண்ணெய் களிம்பு(கிருதம்), மெழுகு (லேகியம்), குளிகை, நீறு (பஸ்பம்) முதலிய பல வடிவிலும் சித்த மருந்துகள் உண்டு. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு புறத்தை உரசும் மாத்திரைக் கட்டிகளும் உள. குளிகை - குளிகா(வ.). செந்தூள் - செந்தூளம் - செந்தூரம் -சிந்தூரம் - ஸிந்தூர(வ.) மருத்துவனுக்குப் பண்டிதன் என்றும், மருத்துவத்திற்குப் பண்டிதம் என்றும் பெயருண்டு. மருந்து கொடுப்பவன் மருத்துவன்; பல்பொருள்களை அறிந்தவன் பண்டிதன். பண்டிதன் என்பது பண்டுவன் என்றும், பண்டிதம் என்பது பண்டுவம் என்றும்,மருவும். |