பண்டுவம் (Medical Treatment) மருத்துவப் பண்டுவம் என்றும் நம்பிக்கைப் பண்டுவம் (Faith cure) என்றும் இருதிறப்படும். பாம்புக் கடியுண்டவனுக்குக் கடிவாயில் பாம்புணிக் கருங்கல் வைப்பதும், எருக்கம் பூவைத் தின்னக் கொடுப்பதும், மூக்கிற் பச்சிலைச்சாறு பிழிவதும், மருத்துவப் பண்டுவம்; மந்திரத்தினால் நஞ்சையிறக்கு வது நம்பிக்கைப் பண்டுவம். நம்பிக்கைப் பண்டுவம், இறும்பூது (Miracle), நேர்த்திக்கடன்; குளிசம் (Amulet) , மணி, பார்வை, மந்திரம், ஊழ்கம் (தியானம்), பாணிப்பு (பாவகம்), முட்டி, அரசக் காட்சி முதலியனவாகப் பல வகைப்படும். இயேசு பெருமான் தொழு (குட்ட) நோயாளியைத் தொட்டு நலப்படுத்தியதும், திருஞான சம்பந்தர் கூன் பாண்டியன் சுர நோயைத் தீர்த்ததும். இறம்பூது; வழிபடுதெய்வத்தைநோக்கி, ஒன்று படைப்பதாக அல்லது செய்வதாக நேர்ந்துகொள்வது நேர்த்திக் கடன்; மந்திர எழுத்துள்ள தகட்டைக் கையிற் கட்டிக் கொள்வது குளிசம்; உருத்திராக்கம், துழாய் (துளசி) மணி, முத்துமாலை முதலிய அணிகள் மணியாகும். மந்திரிகன் தேட்கொட்டுப் பட்டவனை அல்லது பாம்புக்கடியுண்டவனைப் பார்த்துக் குழையடித்து மந்திரிப்பது பார்வை; நஞ்சேறியவனே மந்திரத்தை ஓதுவது மந்திரம்; பாம்புக்கடியுண்டவன் கலுழனை (கருடனை) உள்ளுவது ஊழ்கம்; அவன் தன்னைக் கலுழனாகவே கருதுவது பாணிப்பு. "திடங்கொள் மந்திரம் தியானபா வகநிலை முட்டி" (பெரிய பு.34:1060) "மணிமந்திர மாதியால் வேண்டு சித்திகள்" (தாயுமா.பரிபூ.9) சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர லிரும் பொறையைக் கண்டவுடன், நரிவெரூஉத்தலையார் நல்லுடம்பு பெற்றதாக, 5ஆம் புறப்பாட்டின் கொளுக்கூறும், இது, கண்ட மாலையை (scrofula) அரசன் தொடின் குணமாகுமென்று கருதி அதற்கு அரசன் தீங்கு (Kings evil) என்று ஆங்கிலேயர் பெயரிட்ட தனோடு ஒப்பு நோக்கத்தக்கது. (5) மணிநோட்டம் (இரத்தினப்பரீட்சை) "காக பாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா நூலவர் நொடித்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும் |